வணிகத் தொழில்நுட்பம்

அகண்ட அலைவரிசை இணைப்புகளின் எண்ணிக்கை 25 கோடியாக அதிகரிக்கும்

இந்தியாவில், அடுத்த மூன்று ஆண்டுகளில் (2017-ஆம் ஆண்டிற்குள்) அகண்ட அலைவரிசை இணைப்புகளின் எண்ணிக்கை 25 கோடியாக உயரும் என இங்கிலாந்தை சேர்ந்த ஜி.எஸ்.எம். செல்போன் சேவை நிறுவனங்கள் சங்கம் (ஜி.எஸ்.எம். ஏ) தெரிவித்துள்ளது.

4ஜி தொழில்நுட்பம்செல்போன்களில் அகண்ட அலைவரிசை பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 4ஜி தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் வலுத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் கொள்கைகள் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளுக்கு ஆதரவாக உள்ளதாக ஜி.எஸ்.எம்.ஏ. இந்தியாவின் தலைவர் சந்தீப் கரண்வால் தெரிவித்தார்.

2014 செப்டம்பர் நிலவரப்படி, நம் நாட்டில் 3ஜி மற்றும் 4ஜி அகண்ட அலைவரிசை இணைப்புகளின் எண்ணிக்கை 8.80 கோடியாக உள்ளது. தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையத்தின் புள்ளிவிவரத்தின்படி, அகண்ட அலைவரிசை இணைப்புகள் மாதந்தோறும் 4.95 சதவீத சராசரி வளர்ச்சி கண்டு வருகிறது.

2014 மார்ச் நிலவரப்படி 6.08 கோடி அகண்ட அலைவரிசை இணைப்புகள் இருந்தன. பொதுத்துறையை சேர்ந்த பீ.எஸ்.என்.எல். நிறுவனம் இதில் அதிகபட்சமாக 27.54 சதவீத சந்தை பங்களிப்பை (செல்போன் + லேண்டு லைன்) கொண்டுள்ளது.2014 மார்ச் நிலவரப்படி, பார்தி ஏர்டெல், ஐடியா செல்லுலார், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், வோடாபோன் மற்றும் பீ.எஸ்.என்.எல். ஆகிய ஐந்து நிறுவனங்கள் இந்திய செல்போன் அகண்ட அலைவரிசை சேவையில் முன்னணியில் உள்ளன.

பார்தி ஏர்டெல் அதிகபட்சமாக 1.09 கோடி அகண்ட அலைவரிசை இணைப்புகளை வழங்கியுள்ளது. ஐடியா செல்லுலார் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் முறையே 72 லட்சம் மற்றும் 71 லட்சம் அகண்ட அலைவரிசை இணைப்புகளை வழங்கியுள்ளன. வோடாபோன் நிறுவனம் 70 லட்சமும், பீ.எஸ்.என்.எல். 68 லட்சமும் இந்த இணைப்புகளை வழங்கி உள்ளன.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முதுகெலும்பாக அகண்ட அலைவரிசை சேவை அமைய உள்ளது. மேலும், ரூ.7,000 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைய உள்ள 100 ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் இன்றைய ஆன்லைன் வர்த்தக துறைக்கு முக்கிய ஆதாரமாக அகண்ட அலைவரிசை சேவைகள் உருவெடுக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். போட்டித்திறன்மத்திய அரசு அகண்ட அலைவரிசை சேவையை விரிவுபடுத்த பெரும் முயற்சிகள் எடுத்தால் சிறந்த போட்டித்திறன் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என கூகுள் இந்தியா நிர்வாக இயக்குனர் ராஜன் ஆனந்தன் தெரிவித்தார்.

Leave a Reply