ஏற்றுமதி செய்திகள்

அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா-ரஷ்யா வர்த்தகம் 1,500 கோடி டாலரை எட்டும்

இந்தியா – ரஷ்யா பரஸ்பர வர்த்தகம் (ஏற்றுமதி + இறக்குமதி) அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1,500 கோடி டாலரை எட்டும் என இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது இரு தரப்பு வர்த்தகம் 1,000 கோடி டாலராக உள்ளது. ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு அண்மையில் மூன்று நாள் வர்த்தக கண்காட்சி ஒன்றை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தியது. கண்காட்சியில் 100 இந்திய ஏற்றுமதியாளர்கள் தமது தயாரிப்புகளை பார்வைக்கு வைத்தனர். இதனால் ரஷ்ய வணிக நிறுவனங்களிடமிருந்து கணிசமான ஆர்டர்கள் கிடைத்ததுடன், ஏராளமான வர்த்தக விசாரணைகள் வந்ததாக கூட்டமைப்பின் தலைவர் ரபீக் அகமது தெரிவித்தார். நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இது போன்ற கண்காட்சிகள் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.இந்தியாவின் சரக்குகள் ஏற்றுமதி வளர்ச்சி, ஆகஸ்டு மாதத்தில், ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு 2.35 சதவீதமாக குறைந்து 2,695 கோடி டாலராக உள்ளது. இதனையடுத்து வர்த்தக பற்றாக்குறை 1,083 கோடி டாலராக உயர்ந்துள்ளது. சில ஐரோப்பிய நாடுகளில் நெருக்கடி உள்ளதால் நடப்பு நிதி ஆண்டில் ஏற்றுமதி 34,000 கோடி டாலர் அளவிற்கு இருக்கும் என அகமது தெரிவித்தார். முதலில் 35,000 கோடி டாலர் முதல் 36,000 கோடி டாலர் ஏற்றுமதி செய்ய வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply