இறக்குமதி செய்திகள்

அதிகமாகவே இறக்குமதி செய்து பயன்படுத்துகிறோம் இந்திய மருந்து கம்பெனிகளை குறிவைத்து நடவடிக்கை இல்லை: எஃப்டிஏ ஆணையர் மறுப்பு கருத்துகள்

‘மருந்து தரக்கட்டுப்பாடு தொடர்பாக இந்திய மருந்து கம்பெனி களை குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை’ என்று அமெரிக்க மருந்து மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையர் மார்க்கரெட் ஹம்பர்க் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் உள்ள சில மருந்து தொழிற்சாலைகள், மருந்து தயாரிப்பில் தரக்குறைபாடு உள்ளதாக கூறி, இந்திய மருந்து சிலவற்றுக்கு அமெரிக்கா தடை விதித்தது. தர விதிகளை முறையாக பின்பற்றவில்லை என குற்றம்சாட்டி, மருந்து நிறுவனங்களுக்கு அபராதமும் விதித்தது. ரான்பாக்சி, வோக்ஹார்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அமெரிக்காவின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு (எஃப்டிஏ) ஆணையர் மார்க்கரெட் ஹம்பர்க் 10 நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். அப்போது அவரை சந்தித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, ‘அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இந்திய மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கிறது. தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கக்கூட சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்களுக்கு வாய்ப்பு தரப்படுவதில்லை‘ என்று மார்க்கரெட் ஹம்பர்க்கிடம் தெரிவித்தார்.
பின்னர், மருந்து நிறுவன தயாரிப்புகள் மீது குறை கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நிறுவன தொழிற்சாலைகளை ஆய்வு செய்வதற்கு முன்பு பரஸ்பரம் தகவல் தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும், பாதுகாப்பற்ற மருந்துகளை அமெரிக்காவுக்கு அனுப்புவதை தடுக்கும் வகையில் எஃப்டிஏவுக்கும் மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய மருந்து நிறுவனங்களுக்கு தடைவிதிப்பது பற்றி குறிப்பிட்ட மார்க்கரெட் ஹம்பர்க், ‘‘அமெரிக்க மக்களின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில் தரக்கட்டுப்பாடு விதிமுறைகளை நாங்கள் பின்பற்றுகிறோம். இந்திய மருந்து கம்பெனிகளை மட்டுமே குறிவைத்து இந்த நடவடிக்கைகள் எடுப்பதில்லை. இந்தியாவில் இருந்து அதிக மருந்து இறக்குமதி செய்கிறோம்‘‘ என்றார். இந்திய மருந்துக்கம்பெனிகள் மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்ட இந்திய மருந்து கட்டுபாடு ஜெனரல் ஜி.என்.சிங் கூறுகையில், ‘எஃப்டிஏ தனது நாட்டில் வேண்டுமானால் அங்கு வகுக்கப்பட்ட மருந்து கட்டுப்பாடு நெறிமுறைகளை கடைப்பிடிக்கலாம். இந்தியா இங்குள்ள மருந்து கட்டுப்பாடு நெறிமுறை களை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தக்கூடாது‘ என்றார்.

Leave a Reply