வணிகச் செய்திகள்

அதிவேக ரெயில்பாதை அமைக்கும் திட்டத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு

அதிவேக ரெயில்பாதை அமைக்கும் திட்டத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

வர்த்தகதுறை பரிந்துரை

அண்மையில், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொழிற் கொள்கைகள் மற்றும் அபிவிருத்தி இலாகாவின் வரைவு பரிந்துரையை ஏற்று பல்வேறு அமைச்சகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்தது.

அதில், ரெயில்வே இலாகாவின் அதிவேக ரெயில் பாதைகள் அமைக்கும் திட்டம், புறநகர் இடைவழிகள் மற்றும் துறைமுகங்கள், நிலக்கரி சுரங்கங்கள், மின்சக்தி நிலையங்கள் ஆகியவற்றை இணைக்கும் சரக்கு ரெயில் பாதை திட்டங்களில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. இதன் மூலம் நாட்டின் வருவாயை கணிசமாக பெருக்க முடிவதுடன், ரெயில்வே இலாகாவை நவீனப்படுத்தவும், விரிவு படுத்தவும் முடியும் என்பது வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் வாதம் ஆகும்.

எதிர்ப்பு

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்திய ரெயில்வேக்கு முக்கிய பங்கு உண்டு. மேலும், ரெயில்வே இலாகாவின் மூலம் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதம் ஒரு சதவீதம் வரை உள்ளது.

எனவே, ரெயில்பாதை அமைக்கும் திட்டங்களில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று முதலில் ரெயில்வே தொழிலாளர்கள் சங்கத்தினர் போர்க்கொடி பிடித்தனர். இந்த நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சகமும் தனது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது.

இது பற்றி மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அனுமதிக்க கூடாது

இந்திய ரெயில்வே அமைப்பில் பயணிகள் மற்றும் சரக்கு ரெயில் போக்குவரத்தை நிர்வகிப்பது சிக்கல் நிறைந்த ஒன்றாகும். மேலும் இந்திய ரெயில்வேயில் இவை மிகுந்த உணர்வுப் பூர்வமான அங்கங்களாகவும் திகழ்கின்றன.

நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பாக திகழும் இத்துறைகளில் முக்கியமானவற்றை அன்னிய நேரடி முதலீட்டுக்கு ஒதுக்குவதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு குறித்த விஷயங்களில் நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்வது போலாகிவிடும்.

எனவே நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள அன்னிய நேரடி முதலீட்டை இந்திய ரெயில்வே இலாகாவில் அனுமதிக்க கூடாது.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Leave a Reply