மருந்து பொருட்கள்

அமெரிக்க அரசின் கட்டுப்பாடுகளால் மருந்து ஏற்றுமதியில் பின்னடைவு

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு மருந்துகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் முன்னணி நிறுவனங்களின் மருந்து ஏற்றுமதி வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

5 சதவீத வளர்ச்சி

இந்திய நிறுவனங்கள் கடந்த 2012–13–ஆம் நிதி ஆண்டில் ரூ.79,500 கோடிக்கு மருந்து ஏற்றுமதி செய்தன. 2013–14–ஆம் நிதி ஆண்டில் ஏற்றுமதியில் 10 சதவீத வளர்ச்சி ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அமெரிக்காவின் கெடுபிடிகளால் தற்போது இந்த வளர்ச்சி சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.

சென்ற நிதி ஆண்டின் முதல் பத்து மாதங்களில் (ஏப்ரல்–ஜனவரி) மருந்து ஏற்றுமதி 3 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கும் என தெரிகிறது. மேலும் முழு ஆண்டில் 5 சதவீத வளர்ச்சி மட்டுமே ஏற்பட்டிருக்கும் என முதல்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம் இந்த நிதி ஆண்டிலும் (2014–15) உணரப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்க அமைப்பின் கட்டுப்பாடுகளால் ரான்பாக்சி, வோக்கார்டு, சன் பார்மா, ஸ்டிரைட்ஸ் ஆக்ரோலேப் ஆகிய நிறுவனங்களின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நமது நிறுவனங்களின் மருந்து ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 28 சதவீதமாக உள்ளது. ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பங்கு 18 சதவீதமாகவும், ஆப்பிரிக்க நாடுகளின் பங்கு 17 சதவீதமாகவும் உள்ளது. 2013–14–ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நம் நாடு 1,240 கோடி டாலருக்கு மருந்து ஏற்றுமதி செய்துள்ளதாக மருந்து ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

அளவின் அடிப்படையில் அமெரிக்காவிற்கு அதிக மருந்து ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு வெளியே, அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற மருந்து உற்பத்தி பிரிவுகளை அதிகம் கொண்டு (370) நம் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த உற்பத்தி பிரிவுகளில் அமெரிக்க அரசு அதிகாரிகள் அடிக்கடி சோதனைகள் மேற்கொள்கின்றனர்.

சுகாதார விதிமுறைகள்

அமெரிக்காவின் சுகாதார விதிமுறைகள் மிக கடுமையாக உள்ளன. இதனால் குறிப்பிட்ட உற்பத்தி பிரிவுகளில் தயாராகும் மருந்துகளின் இறக்குமதிக்கு அந்நாடு அடிக்கடி தடை விதித்து விடுகிறது. அண்மைக் காலத்தில் ரான்பாக்சி, வோக்கார்டு, சன் பார்மா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் சில உற்பத்தி பிரிவுகள் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளன.

Leave a Reply