அரிசி & சிறுதானியங்கள்

அரிசி ஏற்றுமதியில் முதலிடத்தை இந்தியா பறிகொடுக்கிறது – மீண்டும் தலைதூக்குகிறது தாய்லாந்து

அரிசி ஏற்றுமதியில் முதலிடத்தை தொடர்ந்து இந்தியா தக்க  வைத்துக்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விட்ட  இடத்தை மீண்டும் தாய்லாந்து பிடிக்கும் என்று தெரிகிறது.   அரிசி  ஏற்றுமதியில் இந்தியா தான் கடந்த இரண்டாண்டாக முதலிடத்தில்  இருந்து வருகிறது. ஆனால், இப்போது திடீரென சரிவை கண்டு  வருகிறது. இதற்கு காரணம், தாய்லாந்து, வியட்நாம் நாடுகளில்  இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிசி விலை, இந்தியாவின் அரிசி  விலையை விட குறைவானது. இதனால் இந்தியாவில் ஏற்றுமதி அளவு  சடாரென குறைந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலை நீடித்தால் விரைவில் இந்தியாவை தாய்லாந்து  பின்னுக்கு தள்ளி விடும் என்று தெரிகிறது.   கடந்த 2012 ம் ஆண்டு  தாய்லாந்தை இந்தியா இந்த விஷயத்தில் முறியடித்து , அரிசி  ஏற்றுமதியில் முதலிடத்தை பிடித்தது. ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய  அரசின் கொள்கை முடிவு தான் காரணம்.   கடந்த 2011 ல் அரசு ஒரு  அதிரடி  முடிவை எடுத்தது. 4 ஆண்டாக இருந்த அரிசி ஏற்றுமதி  தடையை தளர்த்தியது. பாசுமதி அல்லாத ரகங்களுக்கு அதுவரை தடை  இருந்தது. இந்த தடை விலக்கிய பின், பாசுமதி அல்லாத அரிசி  ரகங்கள் அதிக அளவில் ஏற்றுமதி ஆக துவங்கின. இந்திய அரிசிக்கு  வரவேற்பும் அதிகரித்தது.

கடந்த மார்ச் மாதத்துடன்  முடிந்த 2013 – 14 ல் இந்தியா 40 லட்சம்  டன் பாசுமதி அரிசி, 65 லட்சம் டன் பாசுமதி அல்லாத அரிசி ரகங்கள்  ஏற்றுமதி செய்யப்பட்டது. வரும் நிதி ஆண்டில் பாசுமதி அரிசி ரகங்கள்  ஏற்றுமதி பாதிக்காது என்றாலும், மற்ற ரகங்கள்  ஏற்றுமதியில் போட்டி  காரணமாக பாதிக்கலாம். மொத்தத்தில் 80 லட்சம் டன்னாக  குறையலாம் என்று அரிசி ஏற்றுமதியாளர்கள் கருதுகின்றனர்.   தாய்லாந்து அரிசி ரகங்கள் மிகவும் விலை  குறைவு என்பதால் அதிக  அளவில் இந்தாண்டு ஏற்றுமதி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply