வேளாண் பொருட்கள்

அரிசி, சிறு தானியங்கள், தேயிலை உள்பட முக்கிய விளைபொருள்கள் ஏற்றுமதி சரிவு

அரிசி, சிறு தானியங்கள், தேயிலை உள்பட எட்டு முக்கிய விவசாய விளைபொருள்கள் ஏற்றுமதி, ஆகஸ்டு மாதத்தில் சரிவடைந்துள்ளது. வெளிநாடுகளில் நல்ல விலை கிடைக்காததால் ஏற்றுமதி குறைந்துள்ளதாக இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 13 வேளாண் விளைபொருள்கள்நம் நாட்டிலிருந்து 13 வகையான முக்கிய வேளாண் விளைபொருள்கள் வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக இந்த விளைபொருள்களின் ஏற்றுமதி நிலவரத்தை மத்திய வர்த்தக அமைச்சகம் மிக கவனமாக கண்காணிப்பது வழக்கம். கடந்த ஆகஸ்டு மாதத்தில், அரிசி, சிறு தானியங்கள் மற்றும் தேயிலை, காபி, முந்திரி, நறுமண பொருட்கள், புண்ணாக்கு மற்றும் புகையிலை ஏற்றுமதி குறைந்துள்ளது. “சர்வதேச சந்தையில் பல்வேறு முக்கிய வேளாண் விளைபொருள்களின் சப்ளை அதிகரித்ததால் விலை குறைந்து விட்டது. மேலும் சர்வதேச சந்தை விலையை விட உள்நாட்டில் நல்ல விலை கிடைப்பதால் பெரும்பாலானோர் ஏற்றுமதியில் அதிக ஆர்வம் காட்டவில்லை” என இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் அஜய் சகாய் தெரிவித்தார். நறுமணப் பொருள்கள்ஆகஸ்டு மாதத்தில் அரிசி ஏற்றுமதி 3.15 சதவீதம் சரிவடைந்து 60 கோடி டாலராக குறைந்துள்ளது. நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி 2.18 சதவீதம் சரிந்து 23 கோடி டாலராகவும், புகையிலை ஏற்றுமதி 14.7 சதவீதம் குறைந்து 7.30 கோடி டாலராகவும் உள்ளது. தேயிலை ஏற்றுமதி 6.72 சதவீதமும், காபி ஏற்றுமதி 10.5 சதவீதமும் சரிவடைந்துள்ளது. சிறு தானியங்கள் ஏற்றுமதி 50.6 சதவீதமும், முந்திரி ஏற்றுமதி 2 சதவீதமும், புண்ணாக்கு ஏற்றுமதி 64 சதவீதமும் சரிவடைந்துள்ளது. மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. முக்கிய விளைபொருள்களின் ஏற்றுமதி சரிவடைந்ததால் ஆகஸ்டு மாதத்தில் நாட்டின் மொத்த சரக்குகள் ஏற்றுமதி வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த மாதத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதி 2.35 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. அது ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்தபட்ச வளர்ச்சியாக இருந்தது. இதனால் வர்த்தக பற்றாக்குறை 1,083 கோடி டாலராக உயர்ந்தது. 10 சதவீத பங்குநாட்டின் மொத்த ஏற்றுமதியில் வேளாண் விளைபொருள்களின் பங்கு 10 சதவீதமாக இருந்து வருகிறது. கடந்த 2010-11-ஆம் நிதி ஆண்டில் விளைபொருள்கள் ஏற்றுமதி 1,735 கோடி டாலராக இருந்தது. 2011-12-ல் 2,743 கோடி டாலராகவும், 2012-13-ஆம் ஆண்டில் 3,186 கோடி டாலராகவும் உயர்ந்தது. கடந்த நிதி ஆண்டில் (2013-14) சுமார் 4,500 கோடி டாலரை எட்டியது. ஆகஸ்டு மாதத்தில் ஏற்றுமதி சரிவடைந்துள்ளதால் புதிய சந்தைகளை அடையாளம் கண்டு வர்த்தகத்தை வளர்க்கும்படியும், மதிப்புக்கூட்டிய பொருள்களை அதிகம் ஏற்றுமதி செய்யுமாறும் ஏற்றுமதியாளர்களை மத்திய வர்த்தக அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது. எண்ணெய் வித்துக்கள்எனினும் ஆகஸ்டு மாதத்தில் வேறு சில முக்கிய வேளாண் விளைபொருள்களின் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது. எண்ணெய் வித்துக்கள் ஏற்றுமதி 37.2 சதவீதம் உயர்ந்துள்ளது. காய்கறி, பழங்கள் ஏற்றுமதி 3.46 சதவீதமும், பதப்படுத்திய விளைபொருள்கள் ஏற்றுமதி 6.71 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது. கடல் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி 35 சதவீதமும், இறைச்சி, பால் பொருள்கள் மற்றும் கோழிக்கறி ஏற்றுமதி 37 சதவீதமும் அதிகரித்துள்ளது.

Leave a Reply