ஜவுளி & ஆயத்த ஆடைகள்

ஆடைகள் ஏற்றுமதி ரூ.49,096 கோடியாக அதிகரிப்பு

கடந்த ஒரு சில மாதங்களாக, நாட்டின் ஆடைகள் ஏற்றுமதி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.
இதையடுத்து, நடப்பு 2013–14ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான, ஏழு மாத காலத்தில், ஆடைகள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பின் அடிப்படையில், 49,096 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது.டாலர் மதிப்பு:இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப் பட்ட ஏற்றுமதியை விட, 26.2 சதவீதம் அதிகம் என, ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தெரிவித்துள்ளது.
கணக்கீட்டு காலத்தில், டாலர் மதிப்பின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, 15.5 சதவீதம் அதிகரித்து, 826 கோடி டாலராக உயர்ந்துள்ளது.அதேசமயம், கடந்த 2012–13ம் நிதியாண்டில், ஆடைகள் ஏற்றுமதி, அதற்கு முந்தைய நிதியாண்டை விட, 6 சதவீதம் சரிவடைந்து, 1,290 கோடி டாலராக இருந்தது.சென்ற அக்டோபர் மாதத்தில் மட்டும், நாட்டின் ஆடைகள் ஏற்றுமதி, கடந்தாண்டின் இதே மாதத்தை விட, 30.9 சதவீதம் அதிகரித்து, 119 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது. கணக்கீட்டு மாதத்தில், ரூபாய் மதிப்பின் அடிப்படையில் இதன் ஏற்றுமதி, 53.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, இக்கவுன்சிலின் தலைவர் ஏ.சக்திவேல் கூறியதாவது:மத்திய அரசும், ஏற்றுமதி கவுன்சிலும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளால், நாட்டின் ஆடைகள் ஏற்றுமதி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.
ஆடைகள் வடிவமைப்பு, புதிய உத்திகள் போன்றவற்றாலும், ஆடைகள் ஏற்றுமதியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவின் ஆயத்த ஆடைகளுக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முக்கிய சந்தைகளாக திகழ்கின்றன. சென்ற செப்டம்பர் மாதத்தில், அமெரிக்காவிற்கான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, கடந்தாண்டின் இதே மாதத்தை விட, 15 சதவீதம் அதிகரித்து, 23.80 கோடி டாலராக உயர்ந்திருந்தது.இது, நடப்பாண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், 5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 254 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
கணக்கீட்டு காலத்தில், மெக்சிகோ தவிர்த்த, இதர அமெரிக்க பகுதிகளுக்கு, நம்நாட்டிலிருந்து அதிகளவில் ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், நடப்பாண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில், ஐரோப்பிய நாடுகளுக்கான ஆடைகள் :ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி காணவில்லை.
அதாவது, கணக்கீட்டு காலத்தில், ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி, 1 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு, 340 கோடி டாலராக இருந்தது. ஐரோப்பிய நாடுகள்:ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், ஐரோப்பிய நாடுகளுக்கான ஆடைகள் ஏற்றுமதி, 238 கோடி டாலர் மதிப்பிற்கு இருந்தது.இதே காலத்தில், வட அமெரிக்க பகுதிகளுக்கான இவற்றின் ஏற்றுமதி, 148 கோடி டாலராக இருந்தது. மேற்கண்டவை தவிர, இதே காலத்தில், மேற்கு ஆசிய பகுதிகளுக்கான ஆடைகள் ஏற்றுமதி, 104 கோடி டாலராக இருந்தது என, ஏ.இ.பி.சி., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply