வணிகத் தொழில்நுட்பம்

ஆன்லைன் சில்லறை வர்த்தகம்-அமோக வளர்ச்சி

பண்டிகை காலமாக இருந்ததால் நடப்பு அக்டோபர் மாதத்தில் ஆன்லைன் வர்த்தகம் அமோக வளர்ச்சி அடைந்துள்ளது. அதிரடி தள்ளுபடி சலுகைகள் மற்றும் வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகளால் ஸ்நாப்டீல், பிளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்களின் சில்லறை விற்பனை சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.

புதிய எல்லை

இம்மாதத்தில் ஆன்லைன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மின்னணு விற்பனை புதிய எல்லையை எட்டியுள்ளது என பிளிப்கார்ட் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான முகேஷ் பன்சால் தெரிவித்தார்.

அக்டோபர் 6-ந் தேதியன்று இந்நிறுவனம் 20 லட்சம் பொருள்களை விற்பனை செய்துள்ளது. இதன் மதிப்பு ரூ.600 கோடிக்கும் அதிகமாகும். ஸ்நாப்டீல் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க அளவிற்கு விற்பனை செய்துள்ளன. “நாள் ஒன்றுக்கு ரூ.3 லட்சத்திற்கு ஆர்டர்கள் வந்தன. செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. எமது விற்பனை மாதந்தோறும் 250 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது. ஆன்லைன் வர்த்தகத்தை அதிக வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வதே இதற்கு காரணம். கடந்த சில மாதங்களில் இந்தியாவில் ஆன்லைன் விற்பனை 300 சதவீதம் வரை வளர்ச்சி கண்டு உள்ளது. அதே காலத்தில் எமது நிறுவனம் 600 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது” என்று ஸ்நாப்டீல் நிறுவனத்தின் துணை தலைவர் சந்தீப் கோமரவெள்ளி (சந்தைப்படுத்துதல்) தெரிவித்தார்.

அமேசான் இந்தியா நிறுவனத்தின் துணை தலைவர் அமித் அகர்வால் இது குறித்து கூறுகையில், “பண்டிகை காலமான அக்டோபர் மாதத்தில், சில தினங்களில் எமது விற்பனை 300 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. எதிர்பார்த்ததை விட விற்பனை அமோகமாக இருந்தது” என்று கூறினார்.

டெலிவரி தாமதம்

அதே சமயம் விற்பனை திடீரென உயர்ந்ததால் பொருள்களை டெலிவரி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் குறித்த காலத்தில் வாடிக்கையாளர்களிடம் பொருள்களை கொண்டு சேர்ப்பதில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும், இதில் உள்ள இடையூறுகள் களையப்படும் என்றும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply