ஜவுளி & ஆயத்த ஆடைகள்

ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 16 சதவீத வளர்ச்சி

செப்டம்பர் மாதத்தில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 16 சதவீதம் வளர்ச்சி கண்டு 130 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

வங்காளதேசத்தின் ஆயத்த ஆடை உற்பத்தி பிரிவுகளில் தொழிலாளர்களுக்கு போதிய அளவு பாதுகாப்பு இல்லை என சர்வதேச சந்தையில் ஒரு கருத்து உருவாகியிருப்பதும், சீனா ஆடைகளின் விலை அதிகமாக இருப்பதும் உலக நாடுகளில் இந்திய ஆடைகளுக்கு தேவைப்பாட்டை அதிகரிக்கச் செய்துள்ளது. ஏற்றுமதி உயர்ந்ததற்கு இதுவே காரணம் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

சீனா, வங்காளதேசம்“சீனாவில் தொழிலாளர் சம்பளம் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் அதை ஈடு செய்யும் வகையில் ஆடைகளின் விலை உயர்த்தப்படுகிறது. வங்காளதேசத்தில் உள்ள பல தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை.

அண்டை நாடுகளில் பணவீக்கம் அதிகமாக இருப்பது மற்றும் அந்த நாடுகளின் கரன்சி மதிப்பு அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணிகள் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்க சாதமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன” என ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொள்கைரீதியில் மத்திய அரசு தகுந்த ஆதரவு அளித்தால் ஆடைகள் ஏற்றுமதியை இன்னும் அதிகரிக்க முடியும் என முன்னணி ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய நிலையில் வெளிநாடுகளைச் சேர்ந்த பல இறக்குமதியாளர்கள் இந்தியாவில் ஆடைகள் கொள்முதல் செய்வதை பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் கருதுகின்றனர். இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அவர்களுடைய கருத்தாக உள்ளது.

சர்வதேச ஆடைகள் சந்தையில் சீனா, வங்காளதேசம் போன்ற அண்டை நாடுகளால் ஏற்பட்டுள்ள வர்த்தக வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால் விலையை குறைவாக நிர்ணயித்தல், குறித்த காலத்தில் டெலிவரி போன்ற அணுகுமுறைகள் அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.