தங்கம் & ஆபரணங்கள்

இந்தியாவின் ஆபரணங்கள் ஏற்றுமதியை அச்சுறுத்தும் தங்க கடத்தல்

அண்மைக் காலமாக தங்கம் கடத்தல் அதிகரித்துள்ளது. கடத்தல் மூலம் கொண்டு வரப்படும் தங்கம் சட்டவிரோத சுரங்கங்களிலிருந்து வரும் தங்கமாக இருக்கும் என்பதால் வர்த்தக கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ள அமெரிக்கா போன்ற நாடுகளுக்கான ஆபரண ஏற்றுமதி பாதிப்புக்குள்ளாகும் என அஞ்சப்படுகிறது. இந்தியாவின் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 60 சதவீதமாக உள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான பத்து மாதங்களில் ரூ.1.54 லட்சம் கோடி அளவிற்கு ஆபரணங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இந்நிலையில் ஏற்றுமதியாகி உள்ள ஆபரணங்களில் சட்டவிரோத தங்கம் இருப்பதை அமெரிக்க இறக்குமதியாளர் ஒருவர் கண்டுபிடித்தால் இங்கிருந்து ஏற்றுமதி செய்தவர் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கினை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என நவரத்தினம் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் துணைத் தலைவர் பங்கஜ் பரேக் தெரிவித்தார்.

இறக்குமதி கட்டுப்பாடுகளால் கடந்த 2013–ஆம் ஆண்டில் ஏறக்குறைய 200 டன் தங்கம் சட்ட விரோதமாக நாட்டுக்குள் வந்துள்ளது. கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு சுங்கவரியெல்லாம் செலுத்துவதில்லை என்பதால் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். இந்நிலையில் தங்கம் இறக்குமதி தொடர்பான கொள்கைளில் மத்திய அரசு கடுமையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். தங்கம் இறக்குமதிக்கான விதிமுறைகளை தளர்த்தவில்லையென்றால் கடத்தல் மேலும் அதிகரிக்கும் என இந்திய தங்கம், வெள்ளி ஆபரண விற்பனையாளர்கள் சங்கத்தின் செயல் இயக்குனர் கபில் பரேக் கூறினார்.

Leave a Reply