ஏற்றுமதி செய்திகள்செய்திகள்

இந்தியாவின் ஏற்றுமதி சரிவு

நாட்டின் ஏற்றுமதி சென்ற மாரச் மாதத்தில் 5.47 சதவீதம் சரிவடைந்தது என மத்திய வர்த்தகத் துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது: சர்வதேச நாடுகளின் தேவையில் ஏற்பட்ட மந்த நிலையால் சென்ற மார்ச் மாதத்தில் பெட்ரோலியம் மற்றும் பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி சரிவடைந்தது. இதன் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 5.47 சதவீதம் குறைந்து 2,271 கோடி டாலராக (சுமார் ரூ.1.50 லட்சம் கோடி) இருந்தது. தொடர்ந்து 16 மாதங்களாக நாட்டின் ஏற்றுமதி சரிவைக் கண்டுள்ளது.

பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி 21.43% சரிவடைந்து, 207 டாலராக இருந்தது. பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 11.29 சதவீதம் குறைந்தது.சென்ற மாதம் நாட்டின் இறக்குமதி 21.56 சதவீதம் குறைந்து 2,778 கோடி டாலராக (சுமார் ரூ.1.83 லட்சம் கோடி) இருந்தது.

கச்சா எண்ணெய் இறக்குமதி (-) 35.3 சதவீதம் பின்னடைந்து 479 கோடி டாலராக இருந்தது. எண்ணெய் சாரா பொருள்களின் இறக்குமதி 17.92 சதவீதம் குறைந்து 2,298 கோடி டாலராக இருந்தது. குறிப்பாக, தங்கம் இறக்குமதி சென்ற மார்ச் மாதத்தில் 80.48 சதவீதம் வீழ்ச்சி கண்டு 97.29 கோடி டாலாரக இருந்தது. கடந்த 2015-ஆம் ஆண்டு இதே கால அளவில் இதன் இறக்குமதி 498 கோடி டாலராக மிகவும் அதிகரித்திருந்தது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி இடைவெளியான வர்த்தக பற்றாக்குறை 507 கோடி டாலராக (சுமார் ரூ.33,462 கோடி) குறைந்தது. கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இது 1,139 கோடி டாலராக (சுமார் ரூ.75,174 கோடி) அதிகரித்துக் காணப்பட்டது.

சென்ற முழு நிதி ஆண்டில் ஏற்றுமதி 26,113 கோடி டாலராக (சுமார் ரூ.17.23 லட்சம் கோடி) இருந்தது. 2014-15 நிதி ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி அளவான 31,030 கோடி டாலருடன் (சுமார் ரூ.20.48 லட்சம் கோடி) ஒப்பிடுகையில் இது 15.85 சதவீத சரிவாகும்.

அதேபோன்று இறக்குமதி 15.28 சதவீதம் குறைந்து 37,960 கோடி டாலராக (சுமார் ரூ.25.05 லட்சம் கோடி) இருந்தது. வர்த்தகப் பற்றாக்குறை 11,845 கோடி டாலராக (சுமார் ரூ.7.81 லட்சம் கோடி) இருந்தது. 2014-15-இல் இது 13,769 கோடி டாலராக (சுமார் ரூ.9.08 லட்சம் கோடி) காணப்பட்டது.

உலக வர்த்தக கூட்டமைப்பின் புள்ளிவிவரங்களின்படி உலக நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி குறைந்துள்ளது.  குறிப்பாக, கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 10.81 சதவீதம் சரிவடைந்தது.  ஐரோப்பிய நாடுகள் (7.40%), சீனா (11.37%) மற்றும் ஜப்பான் (12.85%) உள்ளிட்ட நாடுகளுக்கான ஏற்றுமதியும் கணிசமான அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பல மாதங்களாக ஏற்றுமதி சரிவடைந்துள்ள நிலையிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வலுவான நிலையில் உள்ளது. அத்துடன் அன்னிய நேரடி முதலீட்டு வரத்தும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

“ஏற்றுமதி சரிவைக் கட்டுப்படுத்த வேண்டும்’

இந்திய ஏற்றுமதி சரிவதை தீவிரமாக கவனத்தில் கொண்டு, அதனைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் சம்மேளனம் (எப்.ஐ.இ.ஓ.) வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த சம்மேளனம் மேலும் கூறியதாவது:  சர்வதேச நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தேக்க நிலையால், இந்தியாவின் பொறியியல், பெட்ரோலியம், தோல், ஜவுளி உள்ளிட்ட பல முக்கியத் துறைகளின் ஏற்றுமதி கடந்த மூன்று மாதங்களாக அதிகப் பின்னடைவை கண்டுள்ளது. இந்திய ஏற்றுமதியில் மேற்கண்ட துறைகளின் பங்களிப்பு மூன்றில் இரண்டு பங்காக உள்ளது.

ஏற்றுமதி சரிவைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும்.  மேலும், ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் வட்டி மானியம் உள்ளிட்ட பல்வேறு ஊக்குவிப்புச் சலுகைகளை ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று எப்.ஐ.இ.ஓ. தெரிவித்துள்ளது.

Leave a Reply