சர்க்கரை

இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 15 லட்சம் டன்னாக இருக்கும்

இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி, நடப்பு 2014-15 பருவத்தில் (அக்டோபர் – செப்டம்பர்), ஒட்டுமொத்த அளவில் 15 லட்சம் டன்னாக இருக்கும் என சர்வதேச வர்த்தக நிறுவனமான சக்டன் தெரிவித்துள்ளது. மத்திய அரசு மூலச்சர்க்கரை ஏற்றுமதிக்கு மானியம் வழங்கும்பட்சத்தில் இது சாத்தியம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரேசில்

சர்வதேச அளவில் சர்க்கரை உற்பத்தியில் பிரேசில் முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. சென்ற பருவத்தில் (2013 அக்டோபர் – 2014 செப்டம்பர்) நம் நாடு 21 லட்சம் டன் மூலச்சர்க்கரை ஏற்றுமதி செய்துள்ளது. நடப்பு பருவத்தில் சர்க்கரை உற்பத்தி அமோகமாக இருக்கும் என்றும், இதன் காரணமாக 15 லட்சம் டன் மூலச்சர்க்கரை ஏற்றுமதி செய்ய முடியும் என்று சக்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொருளாதார விவகாரங்கள் துறைக்கான மத்திய அமைச்சரவை குழு, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ஒரு டன் மூலச்சர்க்கரை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு ரூ.3,300 மானியம் வழங்கியது. இந்த நிலையில், சர்க்கரை ஆலைகள் ஏற்றுமதிக்கான மானிய சலுகையை மத்திய அரசு நடப்பு பருவத்திலும் நீட்டிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆசிய, மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூலச்சர்க்கரை ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளது. எளிதான சரக்கு போக்குவரத்து மற்றும் குறைந்த செலவினம் போன்ற காரணங்களால் அந்த நாடுகள் நம் நாட்டிலிருந்து சர்க்கரையை அதிகம் வாங்குவதே இதற்கு காரணம்.

பயன்பாடு

நடப்பு பருவத்தில், கரும்பு அதிகம் விளையும் மாநிலங்களில் சர்க்கரை உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும் என்றும், இதனால் சர்க்கரை உற்பத்தி 2.55 கோடி டன்னாக இருக்கும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 1 நிலவரப்படி, நாட்டில் சர்க்கரை இருப்பு 70 லட்சம் டன்னாக உள்ளது. சர்க்கரை பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நடப்பு பருவத்தில் பயன்பாடு 2.5 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply