பருத்தி பஞ்சு & நூல்

இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி 77 லட்சம் பொதிகளாக குறையும் அமெரிக்க வேளாண் துறை மதிப்பீடு

இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி எதிர்வரும் 2014-15 பருவத்தில் (ஆகஸ்டு- ஜூலை) 23 சதவீதம் குறைந்து 77 லட்சம் பொதிகளாக குறையும் என அமெரிக்க வேளாண் துறை மதிப்பீடு செய்துள்ளது. பருத்தி உற்பத்தி குறையும் என்பதால் உள்நாட்டில் தேவைப்பாடு அதிகரிக்கும். இதன் காரணமாக ஏற்றுமதி குறைய வாய்ப்புள்ளது.

உற்பத்தி மதிப்பீடு

சர்வதேச அளவில் பருத்தி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நடப்பு 2013-14 பருவத்தில் (ஆகஸ்டு- ஜூலை) உற்பத்தி 3.72 கோடி பொதிகளாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2014-15 பருவத்தில் இது 3.60 கோடி பொதிகளாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு பருவத்தில் 1 கோடி பொதிகள் ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 88 லட்சம் பொதிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இனி உற்பத்தி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளதால் உள்நாட்டில் சப்ளை கடுமையாக பாதிக்கும். எனவே, அடுத்த சந்தை பருவத்தில் ஏற்றுமதி குறையும் என அமெரிக்க வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும், பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இந்தியா தொடர்ந்து பருத்தி ஏற்றுமதி செய்யும். அதேசமயம், இந்தியாவின் ஏற்றுமதியை நிர்ணயிக்கும் சக்தியாக சீனா இருக்கும் என அமெரிக்க அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி கட்டுப்பாடு

உள்நாட்டு ஜவுளி துறைக்கு பருத்தி சப்ளை குறையும் பட்சத்தில் பருத்தி ஏற்றுமதியை குறைக்கும் நோக்கத்துடன் கட்டுப்பாடுகளை இந்திய அரசு விதிக்கும் என அமெரிக்க விவசாய துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply