வணிகத் தொழில்நுட்பம்

இந்தியாவில், 2015-ஆம் ஆண்டில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வோர் எண்ணிக்கை 3.80 கோடியாகும்

இந்தியாவில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 2015-ஆம் ஆண்டில் 3.80 கோடியாக அதிகரிக்கும் என அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அண்மைக் கால ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

7.40 கோடி இந்தியர்கள்

தற்போது 7.40 கோடி இந்தியர்கள் இணையதளங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் ஷாப்பிங் செய்வோர் 14 சதவீதமாக (1.04 கோடி) உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சராசரியாக 35 சதவீதம் உயர்ந்து வருகிறது என அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது–

இணையதள உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா உலகின் மூன்றாவது பெரிய சந்தையாக உருவெடுத்தது. இந்த வகையில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்தியாவில் இணையதள உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 31 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது.

கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள், பிளிப்கார்ட் வலைதளத்தில் இரண்டு மடங்கும், ஜாபோங் வலைதளத்தில் 1.6 மடங்கும், இன்ஃபி பீம் வலைதளத்தில் 6 மடங்கும் அதிக பரிவர்த்தனைகள் நடப்பதை கண்டறிந்துள்ளன. அண்மையில் கூகுள் நிறுவனம் நடத்திய மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் திருவிழாவில் ஏராளமான நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் தமது தயாரிப்புகளை விற்பனை செய்து வருவாய் ஈட்டின. இதில் சில்லறை விற்பனையாளர்களிலிருந்து, கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வரை பெரும் பயன் அடைந்தனர்.

கூகுள் நடத்திய திருவிழாவில் ஜாபோங், பிளிப்கார்ட், இன்ஃபி பீம் மற்றும் மேக்மை டிரிப் ஆகிய வலைதளங்களில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் கவர்ச்சிகரமான தள்ளுபடி சலுகைகளை வழங்கியது. மேலும் அன்றாட சராசரி வருவாயில் 22 மடங்கு அதிக வளர்ச்சி கண்டது. இதன் வாயிலாக மொத்தம் 17 லட்சம் டாலர் வருவாய் ஈட்டியது.

கிரெடிட் கார்டுகள்

இந்தியாவில், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதி ஆண்டில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4 சதவீதம் உயர்ந்துள்ளது. அந்த ஆண்டில் கிரெடிட் கார்டு வழங்குவதில் தனியார் வங்கிகள் முன்னிலையில் உள்ளன. புழக்கத்தில் உள்ள மொத்த கிரெடிட் கார்டுகளில் தனியார் வங்கிகளின் பங்கு 54 சதவீதமாக உள்ளது.

இவ்வாறு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

Leave a Reply