இறக்குமதி செய்திகள்

இந்தியாவுக்கு விரைவில் யுரேனியம் ஏற்றுமதி தொடங்கும்: ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் தகவல்

இந்தியாவுக்கு விரைவில் யுரேனியம் ஏற்றுமதி தொடங்கும் என்று ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் ஆண்ட்ரூ ராப் தெரிவித்துள்ளார்.

ஜி20 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் சிட்னி நகரில் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது இந்தியா சார்பில் அக்கூட்டத்தில் கலந்துகொண்ட குழுவினருடன் ராப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் இதுகுறித்து அமைச்சர் கூறும்போது, “இந்தியாவுக்கு விரைவில் யுரேனியம் விற்பனை தொடங்கும்” என்றார்.

உலகம் முழுவதும் உள்ள யுரேனிய வளத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆஸ்திரேலியாவில்தான் உள்ளது. ஆண்டுக்கு 7,000 டன் யுரேனியத்தை அந்த நாடு ஏற்றுமதி செய்து வருகிறது. எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினையை எதிர்கொண்டுவரும் இந்தியா, அணுசக்தியைக் கொண்டு அதிக அளவில் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. அணு உலைகளுக்கு யுரேனியம் முக்கிய எரிபொருளாக பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக அர்ஜென்டினா, கஸகஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா ஏற்கெனவே அணுசக்தி ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. முன்னதாக, இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய அரசு விலக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply