மீன் & கடல் பொருட்கள்

இந்திய இறால் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு: கிழக்கு ஆசிய நாடுகளில் நோய் தாக்குதலால்…

நடப்பு ஆண்டில், இந்தியாவின் இறால் ஏற்றுமதி, சிறப்பான அளவில் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தாய்லாந்து உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகளில், நோய் தாக்குதலால், இறால் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது.இதை ஈடு செய்ய, இந்நாடுகள், இந்தியாவிலிருந்து, இறாலை இறக்குமதி செய்து, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு, மறு ஏற்றுமதி செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் அன்வர் காசிம் தெரிவித்துள்ளார்.

உலகளவில் இறால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், தாய்லாந்து இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நாட்டில், ஆண்டுக்கு, 5 லட்சம் டன் இறால் உற்பத்தியாகிறது. இதில், 3.50 லட்சம் டன் இறால்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.பாதியாக குறைவு: இந்நிலையில், குறிப்பிட்ட ஒரு வகை நோய் தாக்குதலால், அந்நாட்டில் இறால் உற்பத்தியும், ஏற்றுமதியும், பாதியாக குறையும் என, தாய் இறால் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நடப்பு 2013ம் ஆண்டில், முதல் ஐந்து மாதங்களில், தாய்லாந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொண்ட இறால் ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, அளவின் அடிப்படையில், 38 சதவீதம் குறைந்து, 12,548 டன்னாக சரிவடைந்துள்ளது. மதிப்பின் அடிப்படையிலும், இந்நாட்டின் ஏற்றுமதி, 34 சதவீதம் குறைந்து போயுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார ”ணக்க நிலையால், இந்தியாவிலிருந்து, இந்நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட இறால் ஏற்றுமதி குறைந்து போயுள்ளது. மேற்கண்ட நாடுகளில் இதன் விலை குறைந்து போனதால், இந்திய ஏற்றுமதியாளர்களின் வருவாய் சரிவடைந்துள்ளது.

கடந்த 2012-13ம் நிதியாண்டின், தென்கிழக்கு ஆசிய நாடுகள் இந்தியாவிலிருந்து, 3.41 லட்சம் டன் கடல் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து கொண்டுள்ளன. இதன் மதிப்பு, 4,357 கோடி ரூபாயாகும். நாட்டின் மொத்த கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில், கிழக்கு ஆசிய நாடுகளின் பங்களிப்பு, 37 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, மொத்த ஏற்றுமதி வருவாயில், 23 சதவீதமாகும்.

கடந்த 2011-12ம் ஆண்டில், இந்நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, சென்ற நிதியாண்டில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி, 24.9 சதவீதம் அதிகரித்துள்ளது.ஈக்வேடார்: தாய்லாந்து உள்ளிட்ட, கிழக்கு ஆசிய நாடுகளின் இறால் ஏற்றுமதி, நோய் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்பு நிதியாண்டில், இந்நாடுகளுக்கான, இந்தியாவின் இறால் ஏற்றுமதி, மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என, அன்வர் காசிம் தெரிவித்தார்.

நோய் தாக்குதலால் ஏற்பட்டுள்ள உற்பத்தி குறைவு மற்றும் ஏற்றுமதியை ஈடு செய்யும் வகையில், தாய்லாந்து நாடு, கடந்த ஒரு சில மாதங்களாக, இந்தியா, ஈக்வேடார், வியட்நாம் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து, இறாலை அதிகளவில் இறக்குமதி செய்து கொள்கிறது.இதனை, தாய்லாந்து நாட்டின் பதப்படுத்தப் பட்ட உணவு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.கடந்த 2011ம் ஆண்டில், ஆசிய நாடுகளின் ஒட்டு மொத்த இறால் உற்பத்தி, 30 லட்சம் டன்னாக இருந்தது. இதன் மதிப்பு, 1,330 கோடி டாலராகும் என, அமெரிக்க உணவு மற்றும் வேளாண் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply