ஏற்றுமதி செய்திகள்

இந்திய ஏற்றுமதியில் சரிவு

இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏற்றுமதிகள் 3.49 சதவீதமாக சரிந்துள்ளது.

சென்ற ஆண்டின் டிசம்பர் மாதத்தில் பெட்ரோலியம் பொருள்களின் ஏற்றுமதி 16 சதவீத அளவுக்கு குறைந்ததால், ஒட்டுமொத்தமாக இந்திய ஏற்றமதிகளின் மதிப்பு குறைந்துள்ளது என்று மத்திய வர்த்தகத் துறை செயலர் எஸ்.ஆர்.ராவ் புது தில்லயில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த மாதம் நடைபெற்ற மொத்த ஏற்றுமதியின் மதிப்பு சுமார் ரூ. 1,60,500 கோடியாக இருந்தது. ஆயினும் இந்திய இறக்குமதிகளும் அந்த மாதத்தில் 15.25 சதவீதம் குறைந்ததால் வர்த்தகப் பற்றாக்குறை விகிதம் குறைந்தது என்று அவர் கூறினார். டிசம்பரில் இந்திய இறக்குமதிகளின் மதிப்பு சுமார் ரூ. 2,22,000 கோடியாகும். குறிப்பாக தங்கம், வெள்ளி ஆகியவற்றின் இறக்குமதி கணிசமாக குறைந்தது. 2013 டிசம்பரில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம், வெள்ளியின் மதிப்பு ரூ. 10,800 கோடியாக இருந்தது. 2012 டிசம்பரில் இந்தியா இறக்குமதி செய்த தங்கம், வெள்ளியின் மதிப்பான ரூ. 34,200 கோடியுடன் ஒப்பிடுகையில் 68 சதவீதம் குறைந்துள்ளது.

அதே சமயத்தில், கச்சா எண்ணெய் இறக்குமதி சற்று அதிகரித்தது. கடந்த மாதம் இறக்குமதியான கச்சா எண்ணெயின் மதிப்பு சுமார் ரூ. 85,000 கோடியாகும். பெட்ரோலியம் பொருள்களின் இறக்குமதி ஒன்றைத் தவிர, பொறியியல், ஜவுளி, ரசாயனம் ஆகிய துறைகளில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.

வர்த்தகப் பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் விதமாக தங்கம், வெள்ளி இறக்குமதி செய்வதில் கடுமையான விதிமுறைகளை மத்திய அரசு சென்ற ஆண்டு கொண்டுவந்தது. இதையடுத்து 2013-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரையிலான கால அளவில், தங்கம், வெள்ளி ஆகியவற்றின் இறக்குமதி, அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 சதவீத அளவு குறைந்துள்ளது.

2013-2014 நிதி ஆண்டில், 325 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 19,82,500 கோடி) மதிப்பிலான ஏற்றுமதிகள் நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. நிதி ஆண்டு இறுதிக்குள் இந்த இலக்கை அடைந்துவிட முடியும் என்று வர்த்தகத் துறை செயலர் எஸ்.ஆர்.ராவ் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply