தொழில்நுட்ப செய்திகள்

இன்டர்நெட் மூலம் வணிகம் 2020-க்குள் 76 பில்லியன் டாலராக உயரும்

இன்டர்நெட் மூலம் இந்தியாவில் செய்யப்படும் வணிகம் வரும் 2020-க்குள் 76 பில்லியன் டாலராக உயரும் என்று பிளிப்கார்ட் நிறுவன துணைத் தலைவர் அங்கித் நகோரி தெரிவித்தார்.

கோவை செய்தியாளர்களிடம் அங்கித் நகோரி வெள்ளிக்கிழமை கூறியது: இன்டர்நெட் மூலம் வணிகம் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது ஆண்டுக்கு 1.62 பில்லியன் அமெரிக்க டாலர் வணிகம் நடக்கிறது. இந்த ஆண்டுக்குள் 3 பில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2020-க்குள் இன்டர்நெட் வணிகம் 76 பில்லியன் டாலராக உயரும்.

இதுவரை பிளிப்கார்ட் நிறுவனத்தில் 3,000-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 12 ஆயிரமாக உயரும். 18 மில்லியன் பதிவு பெற்ற வாடிக்கையாளர்கள் உள்ளனர். கப்பல் மூலம் மாதம் 5 மில்லியன் தொகைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பிளிப்கார்ட் இணையதளத்தில் தங்கள் பொருள்களை விற்பனையாளர்களும் உற்பத்தியாளர்களும் பதிவு செய்யத் தேவையான ஆன்லைன் பயிற்சிகளை வழங்குகிறோம். வாங்கும் பொருள்களின் தரத்தைப் பராமரிக்கவும், விற்பனைப் பொருள்களைப் பட்டியலிடவும், பொருள்களை உரிய இடத்துக்குத் தகுந்த ஏற்பாடுகளுடன் அனுப்பவும் ஏற்பாடுகளைச் செய்கிறோம்.

கோவை மற்றும் திருப்பூரில் உள்ள உற்பத்தியாளர்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் தங்கள் பொருள்களைப் பட்டியலிடுவதற்கு உரிய உதவிகளைச் செய்ய உள்ளோம்.

நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் சிறந்து விளங்கும் கிளஸ்டர்களை இன்டர்நெட் வணிகத்தில் இணைக்கத் தேவையான ஏற்பாடுகளை பிளிப்கார்ட் நிறுவனம் செய்து வருகிறது.

எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் வாங்கினால் குறித்த காலத்துக்குள் அதில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அதை மாற்றித் தருவதற்கும் பிளிப்கார்ட் நிறுவனம் உறுதி தருகிறது. வாங்கிய துணியை அளவு மாற்றித் தர வேண்டுமென்றாலும் அதை இந்நிறுவனம் கூடுதல் செலவில்லாமல் மாற்றித் தரத் தயாராக உள்ளது என்றார் அங்கித் நகோரி.

டெக்ஸ்பிரனர்ஸ் ஃபோரத்தின் செயலர் டி.பிரபு, திருப்பூர் மாவட்ட இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் தலைவர் ராஜா எம்.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply