இரும்பு தாது & உலோகம்

இரும்பு தாது ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்க எதிர்ப்பு

இரும்புத் தாது பற்றாக்குறையாக உள்ள நிலையில், அதன் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதால், உள்நாட்டு உருக்கு துறை பாதிக்கப்படும் என, உருக்கு நிறுவனங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.கடந்த வாரம், அசோசெம் கருத்தரங்கில் பிரதமர் மன்மோகன்சிங் பேசும்போது, “மொத்த ஏற்றுமதியை அதிகரித்து, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, இரும்புத் தாது ஏற்றுமதியில் உள்ள இடர்பாடுகள் களையப்படும்” என்று தெரிவித்தார்.

கோரிக்கை: பிரதமர், இடர்பாடுகள் குறித்து நேரடியாக தெரிவிக்கவில்லை என்றபோதிலும், சுரங்க நிறுவனங்களின் கோரிக்கை களை ஏற்று, இரும்புத் தாதுவிற்கான, 30 சதவீத ஏற்றுமதி வரி நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இரும்புத் தாதுவை ஏற்றுமதி செய்ய பயன்படுத்தும், சரக்கு ரயில் கட்டணத்திலும் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”மத்திய அரசு, இத்தகைய நடவடிக்கை எடுத்தால், அது, ஏற்கனவே இரும்புத் தாது உற்பத்தி குறைவு மற்றும் பற்றாக்குறையால் தவிக்கும், உருக்கு துறைக்கு பேரழிவை ஏற்படுத்தும்’ என, ஜே.எஸ். டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர், சேஷகிரி ராவ் தெரிவித்தார்.

இரும்புத் தாது பற்றாக்குறையால், பல உருக்கு நிறுவனங்கள், அவற்றின் உற்பத்தி திறனை விட, குறைந்த அளவிற்கே உருக்கு உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றன.சென்ற 2012-13ம் நிதியாண்டில், உள்நாட்டில், 14 கோடி டன் இரும்புத் தாது உற்பத்தி செய்யப்பட்டது. இதன் காரணமாக, 10 கோடி டன் உருக்கு உற்பத்தி திறன் கொண்ட நிறுவனங்கள், 7.20 கோடி டன் அளவிற்கே, உருக்கை உற்பத்தி செய்ய முடிந்தது.

கர்நாடகா: “இந்நிலையில், கோவாவில் இரும்புத் தாது உற்பத்தி நிறுத்தம் மற்றும் கர்நாடகாவில், பல சுரங்கங்கள் மீண்டும் இயங்க அனுமதி தருவதில் ஏற்பட்டுள்ள தாமதம் போன்றவற்றால், கடந்த நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில் இரும்புத் தாது உற்பத்தி குறையும்” என, அவர் மேலும் கூறினார்.நாட்டின் இரும்புத் தாது உற்பத்தி, கடந்த 2010ம் ஆண்டு முதல், தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இந்திய கனிம தொழில்கள் கூட்டமைப்பு, நடப்பு, 2013-14ம் நிதியாண்டில், இரும்புத் தாது உற்பத்தி, 25 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 10-11 கோடி டன் என்ற அளவிற்கே இருக்கும் என, மதிப்பிட்டு உள்ளது.

இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டிலும், உருக்கு நிறுவனங்கள், இரும்புத் தாது இறக்குமதியை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.சென்ற 2012-13ம் நிதியாண்டில், கடலோர பகுதிகளில் உள்ள உருக்கு நிறுவனங்கள், 30 லட்சம் டன் இரும்புத் தாதுவை இறக்குமதி செய்தன.இரும்புத் தாது இறக்குமதி செலவினத்தை சமாளிக்க முடியாமல், அதே சமயம், உள்நாட்டில் போதுமான அளவிற்கு, இரும்புத் தாது கிடைக்காததால்,72 மென்னிரும்பு உருக்காலைகளில், 54 ஆலைகள் மூடப்பட்டன.

கர்நாடகாவில், ஆண்டுக்கு ஒரு கோடி டன் உருக்கு உற்பத்தி திறன் கொண்ட, ஜே.எஸ். டபிள்யூ ஸ்டீல் நிறுவனம், 75 – 80 சதவீத அளவிற்கே உற்பத்தி மேற்கொண்டு வருகிறது.இதே போன்று, பீ.எம்.எம். இஸ்பத், கல்யாணி ஸ்டீல், சதாவாஹனா இஸ்பத் ஆகிய நிறுவனங்கள், அவற்றின் மொத்த உற்பத்தி திறனில், 30 – 60 சதவீத அளவிற்கே இயங்கி வருகின்றன.

இறக்குமதி: இதனிடையே, முழுமையான உருக்கு இறக்குமதியும் அதிகரித்து வருகிறது. சென்ற நிதியாண்டில், 700 கோடி டாலர் மதிப்பிலான, 83 லட்சம் டன், முழுமையான உருக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இது, நடப்பு நிதியாண்டில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும், உருக்கு நிறுவனங்களை பாதிப்பதாக உள்ளது. “உள்நாட்டு உருக்கு நிறுவனங்களுக்கு போதிய அளவில் இரும்புத் தாது கிடைப்பதற்கும், உருக்கு பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை தானாகவே குறையும்” என, சேஷகிரி ராவ் மேலும் கூறினார்.

Leave a Reply