அரசு திட்டங்கள்

ஈரானுக்கான ஏற்றுமதியில் மதிப்புக்கூட்டு விதிகளை மத்திய அரசு தளர்த்தியது

ஈரான் நாட்டுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதியில் மதிப்புக்கூட்டு விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதனால் அந்நாட்டுடனான பரஸ்பர வர்த்தகம் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம் நாட்டிலிருந்து மருந்து, இயந்திரங்கள், போக்குவரத்து சாதனங்கள், ரசாயனங்கள், செயற்கை இழை, உருக்கு மற்றும் துணி நூல் ஆகியவை ஈரானுக்கு அதிகம் ஏற்றுமதியாகின்றன. இதுவரை அந்நாட்டுக்கு மறுஏற்றுமதி செய்யப்படும் சரக்குகள் கண்டிப்பாக 15 சதவீதம் மதிப்புக்கூட்டப்பட்டு இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. தற்போது மறுஏற்றுமதியில் மதிப்புக் கூட்டுதல் தேவையில்லை என வெளிநாட்டு வர்த்தகத்திற்கான தலைமை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதனால் நடப்பு நிதி ஆண்டில் (2014-15) ஈரானுக்கான ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும் என வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் ஈரானுக்கு மறுஏற்றுமதி செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களுக்கு ரூபாயில் கட்டணம் செலுத்தப்படும் பட்சத்தில் இந்த சலுகை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதி ஆண்டில் (2013-14) ஏப்ரல்-பிப்ரவரி மாத காலத்தில் ஈரான் நாட்டுக்கான ஏற்றுமதி 60 சதவீதம் உயர்ந்து 456 கோடி டாலரை எட்டியுள்ளது. ரூபாயில் கட்டணம் பெறப்படுவதால் கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்த நாட்டிற்கான ஏற்றுமதி இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது என இந்திய ஏற்றுமதியாளர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply