இறக்குமதி செய்திகள்

உக்ரைன் நெருக்கடி நீடித்தால் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி குறையும்

கிரீமியா விவகாரத்தால் உக்ரைனில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நீடிக்கும் பட்சத்தில் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி குறையும் என ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸின் தலைமை செயல்பாட்டு அதிகாரி சதேந்திரா அகர்வால் தெரிவித்தார். ‘‘ரஷ்யாவிலும், உக்ரைனிலும் நடவுப் பணிகள் தொடங்கி விட்டன. தற்சமயம் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் பதற்றம் 6 மாதங்களுக்கு மேல் நீடித்தால் வர்த்தக நடவடிக்கைகளில் குழப்பம் ஏற்பட்டு அங்கிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது’’ என்று அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது–

சர்வதேச அளவில் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் உக்ரைன் நாடு முதலிடத்தில் உள்ளது. நமது மொத்த சூரியகாந்தி எண்ணெய் தேவையையும் அநேகமாக அந்த நாடுதான் பூர்த்தி செய்கிறது. பாமாயிலை அடுத்து சூரியகாந்தி எண்ணெயைத்தான் இந்தியா அதிகம் இறக்குமதி செய்கிறது.

நம் நாட்டில் தற்போது தனிநபர் சமையல் எண்ணெய் நுகர்வு ஆண்டுக்கு 14 கிலோவாக உள்ளது. ஒட்டுமொத்த நுகர்வு ஆண்டுக்கு 1.80 கோடி டன்னாகும். அடுத்த 3 ஆண்டுகளில் இந்த அளவு 2.20 கோடியாக உயரும். விற்பனையாகும் மொத்த சமையல் எண்ணெயில் பாக்கெட் எண்ணெயின் பங்கு 50 சதவீதமாக உள்ளது. இந்திய சமையல் எண்ணெய் சந்தையில் ருச்சி சோயா 18 சதவீத பங்கினைக் கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply