அரிசி & சிறுதானியங்கள்

உக்ரைன் போர் பதற்றத்தால் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி உயர வாய்ப்பு

உக்ரைன் போர் பதற்றத்தால் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி உயர வாய்ப்புள்ளது என சர்வதேச வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியன் சந்தைகளுக்கான கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் பங்கு கணிசமாக உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றத்தால் கோதுமை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நாடுகளின் கோதுமை ஏற்றுமதி சரிவால் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற ஆண்டில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 36 லட்சம் டன்னாக இருந்தது. போர் பதற்ற சூழ்நிலையால் இது 50 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், இந்திய கோதுமை நீண்ட கால அடிப்படையில் அதிக விலைக்கு ஏற்றுமதி செய்யப்படும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து துறைமுகங்களில் ஏப்ரல் மாதத்திற்கான கோதுமை ஏற்றுமதி நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளது. தனியார் வர்த்தகர்கள் 2 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் பெற்றுள்ளனர். பொதுத்துறை நிறுவனங்கள் 1.50 லட்சம் டன் கோதுமையை மேற்கு ஆசியன் மற்றும் தென் கிழக்கு ஆசியன் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய தயாராக உள்ளனர். இந்தியாவில் இருந்து 40 ஆயிரம் டன் கோதுமையை இறக்குமதி செய்ய இந்தோனேஷிய கோதுமை ஆலைகள் ஆர்வம் காட்டி வருகின்றன. வங்காளதேசத்திற்கு 50,000 டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply