வணிகச் செய்திகள்

உச்சத்தில் தக்காளி விலை டெல்லியில் ரூ.80க்கு விற்பனை

டெல்லியில், ஒரு கிலோ தக்காளி ரூ.80க்கு விற்கப்படுவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதை அரசு கூர்ந்து கவனித்து வருவதாகவும், விலை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சக செயலாளர் கேசவ்தேசிராஜ் நேற்று கூறுகையில், பருவ மழை மற்றும் வறட்சி உள்ளிட்ட காரணங்களால் சந்தைகளுக்கு குறைந்த அளவே தக்காளி வருவதால் அதன் விலை அதிகரித்துள்ளது.

தக்காளி அதிகளவில் சாகுபடி செய்யும் இடங்களில் இருந்தும் குறைந்த அளவே வரத்து இருக்கிறது. அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை அரசு கூர்ந்து கண்காணித்து வருகிறது. விலை உயர்வை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சீசனை பொறுத்து தக்காளி விலை முடிவாகிறது. மேலும் நீண்ட நாட்கள் இருப்பு வைக்கவும் முடியாது. இந்தியா முழுவதும் 59 நகரங்களில் சராசரியாக தக்காளி விலை ஒரு கிலோ ரூ.60 வரையில் விற்கப்படுகிறது என்றார்.

டெல்லி ஆசாத்பூர் காய்கறி மண்டியிலுள்ள தக்காளி வியாபாரிகள் கூறுகையில், வட மாநிலங்களுக்கு தேவையான தக்காளி இமாச்சல பிரதேசத்தில் இருந்துதான் வருகிறது. அங்கு விளைச்சல் பாதித்துள்ளதால் அங்கிருந்து குறைந்த அளவே தக்காளி வருவதால் டெல்லியிலும், மற்ற இடங்களிலும் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. வறட்சியாலும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாசிக் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்தும் தக்காளி குறைவாகத்தான் வருகிறது என்றனர்.

Leave a Reply