வணிகச் செய்திகள்

உற்பத்தி துறை வளர்ச்சி சரிவு

உற்பத்தி துறை வளர்ச்சி கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதம் குறைந்துள்ளது. புதிய ஆர்டர்கள் கிடைப்பது மார்ச் மாதத்திலிருந்து தொடர்ந்து தேக்க நிலையில் உள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் நேற்று வெளியானது. ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கைக்கு பிறகு தொழில்துறைக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

நிக்கி இந்தியா வெளியிடும் இந்திய தொழில்துறை கொள்முதல் மேலாளர்கள் புள்ளிவிவரங்கள் இந்தியாவின் தொழில்துறை செயல்பாடுகளைக் காட்டும் குறியீடாக உள்ளது. இந்த புள்ளிவிவரங்கள்படி 52.4 புள்ளிகளிலிருந்து ஏப்ரல் மாதம் 50.5 புள்ளியாக தொழில்துறை வளர்ச்சி சரிந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் மிக மோசமான சரிவில் தொழில்துறை உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் விரிவாக்க செலவுகள் குறைந்துள்ளன. கடந்த மாதத்திலிருந்து புதிய வேலைகளுக்கான களம் தேக்கத்தில் உள்ளது என்று இந்த அறிக்கை குழுவின் தலைவரான பொருளாதார நிபுணர் பாலியன்னா டி லிமா குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக கடந்த மூன்று மாதங்களாக இந்திய தொழில்துறைக்கு புதிய ஆர்டர்கள் கிடைப்பது குறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கட்டமைப்பு துறை வளர்ச்சி

உட்கட்டமைப்புத் துறையின் ஆண்டு வளர்ச்சி வீதம் 16 மாதங்களில் இல்லாத வகையில் மார்ச் மாதம் அதிகரித்துள்ளது. இந்திய உள்கட்டமைப்பு துறையின் ஆண்டு வளர்ச்சி வீதம் மார்ச் மாதத்தில் 6.4 சதவீதமாக உள்ளது. இந்த வளர்ச்சி வீதம் கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவாகும். மத்திய அரசு நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள்படி அதிக மின் உற்பத்தி மற்றும் உர உற்பத்தி காரணமாக இது அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 2015-16 மார்ச் 31 ல் முடிவடைந்த ஆண்டில் 2.7 சதவீதம் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் இந்த வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதத்துக்கு முன்னர் உர உற்பத்தி 22.9 சதவீதம் அதிகரித் துள்ளது. மேலும் மின் உற்பத்தியின் வளர்ச்சி 11.3 சதவீதமாக உள்ளது என்று அந்த புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது.

Leave a Reply