வணிகச் செய்திகள்

உலகில் அதிகம் விரும்பப்படும் இரண்டு இந்திய நிறுவனங்கள்

பிரபல பார்ச்சூன் பத்திரிகை உலகில் அதிகம் விரும்பப்படும் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஓ.என்.ஜி.சி. மற்றும் டாட்டா ஸ்டீல் ஆகிய இரண்டு இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

பார்ச்சூன் பத்திரிகை தயாரித்த பட்டியலில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 350 நிறுவனங்கள் உள்ளன. ஆனால் டாப் 50 நிறுவனங்களின் பட்டியலில் இந்த இரண்டு நிறுவனங்கள் இடம் பெறவில்லை. எனினும் உலகின் மிகப்பெரிய உலோக நிறுவனங்களில் டாட்டா ஸ்டீல் 4 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முந்தைய தர வரிசையில் இந்நிறுவனம் 6 வது இடத்தில் இருந்தது. சுரங்கம், கச்சா எண்ணெய் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களில் ஓ.என்.ஜி.சி. 7 வது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் பத்தாவது இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் அதிகம் விரும்பப்படும் டாப் 10 நிறுவனங்களில் ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான அமேசான் டாட் காம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இணையதள நிறுவனமான கூகுள் 3 வது இடத்திலும், அமெரிக்காவின் பெர்க்ஷையர் ஹாத்தவே 4 வது இடத்திலும் உள்ளன. ஸ்டார்பக்ஸ் 5 வது இடத்தையும், கோக கோலா 6 வது இடத்தையும் பிடித்துள்ளன.

பார்ச்சூன் தயாரித்த இந்த நீண்ட பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் 17,100 கோடி டாலர் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. வருவாய் அடிப்படையில் மட்டுமல்லாமல் தனது தயாரிப்புகளால் உலகம் முழுவதுமாக இந்நிறுவனம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்திரா நூயி வழிநடத்தும் பெப்சிகோ 42 வது இடத்தில் உள்ளது. நைக் (13), ஐ.பீ.எம். (16), மைக்ரோசாப்ட் (24), வால்மார்ட் (28), ஜே.பி. மார்கன் சேஸ் (30), கோல்டுமேன் சாக்ஸ் (34) மற்றும் பேஸ்புக் (38) ஆகிய நிறுவனங்களும் அதிகம் விரும்பப்படும் டாப் 50 நிறுவனங்களின் பட்டியலில் உள்ளன.

நன்றி தினத்தந்தி

Leave a Reply