தொழில்நுட்ப செய்திகள்

உலக அளவில் இணையதள இணைப்புகள் 300 கோடியாக அதிகரிக்கும்

உலக அளவில், இந்த ஆண்டு இறுதியில் இணையதள இணைப்புகளின் எண்ணிக்கை 300 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, உலக மக்கள்தொகையில் 40 சதவீதமாக இருக்கும். இதில் 66 சதவீத இணைப்புகள் வளர்ந்து வரும் நாடுகளில்தான் இருக்கும் என்றும், ஆண்டு இறுதியில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 700 கோடியை எட்டும் என்றும் ஐ.நா. சபையின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

ஆய்வறிக்கை மேலும் கூறுவதாவது-

வளர்ந்து வரும் நாடுகளில் 31 சதவீத இல்லங்களில் இணையதள இணைப்புகளை பெற்றிருக்கும். வளர்ச்சியடைந்த நாடுகளில் 78 சதவீத இல்லங்களில் இணையதள இணைப்புகள் காணப்படும். செல்போன்களில் இணையதள பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், 2014 இறுதியில் உலகில் மொத்தம் 700 கோடி மொபைல் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கும். இதில் 360 கோடி இணைப்புகள் ஆசிய-பசிபிக் பிராந்தியம் கொண்டிருக்கும்.

ஆப்பிரிக்காவில் மொத்த மக்கள்தொகையில் 20 சதவீதத்தினர் இணையதள இணைப்பினை பெற்றிருப்பார்கள். அமெரிக்காவில் 66 சதவீதத்தினருக்கு இணைதள இணைப்புகள் இருக்கும். ஐரோப்பாவில் அதிகபட்சமாக 75 சதவீதத்தினருக்கு இந்த வசதி இருக்கும்.

சர்வதேச அளவில், செல்போனில் அகண்ட அலைவரிசை பயன்பாட்டைப் பொறுத்தவரை ஆண்டு இறுதிக்குள் இணைப்புகள் 230 கோடியாக உயரும். இதில் வளர்ந்து வரும் நாடுகள் 55 சதவீத பங்கினைக் கொண்டிருக்கும்.

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply