வணிகச் செய்திகள்

எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 59.89-ஆக உயர்ந்தது

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வெள்ளிக்கிழமை அன்று 43 காசுகள் அதிகரித்து எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு 59.89–ஆக உயர்ந்தது. டாலர் வரத்து அதிகரித்துள்ளதே இதற்கு காரணமாகும்.

முயற்சிகளுக்கு வெற்றி

நிதி பற்றாக்குறையையும், நடப்பு கணக்கு பற்றாக்குறையையும் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க தொடங்கியுள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

கடந்த ஒரு மாத காலத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 6 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் முறையே 1 சதவீதம் மற்றும் 12 சதவீதம் குறைந்துள்ளது.

எனவே, வளர்ந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மேற்கொள்ளும் முதலீட்டிற்கு அதிக ஆதாயம் கிடைக்கிறது. அன்னிய நிதி நிறுவனங்கள் மார்ச் மாதத்தில் இதுவரை இந்திய பங்குச் சந்தைகளில் 290 கோடி டாலர் முதலீடு செய்துள்ளன. நடப்பு ஆண்டில் இதுவரை மேற்கொண்ட நிகர முதலீடு 330 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

நடப்பு கணக்கு பற்றாக்குறை

கடன்பத்திரங்களிலும் இந்த நிறுவனங்களின் முதலீடு உயர்ந்துள்ளது. இதனால், டாலர் வரத்து அதிகரித்துள்ளது.

சென்ற 2012-13-ஆம் நிதி ஆண்டில் அன்னியச் செலாவணி வெளியேற்றத்திற்கும், வரவுக்கும் இடையில் உள்ள வித்தியாசமான நடப்பு கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத அளவிற்கு 8,820 கோடி டாலராக உயர்ந்தது. இதனையடுத்து, கடந்த 2013 ஆகஸ்டு மாதத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 68.85–ஆக வீழ்ச்சி அடைந்தது. இதனுடன் ஒப்பிடும்போது ரூபாய் மதிப்பு தற்போது 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

டாலர் வரத்தை அதிகரிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகளும் இதற்கு முக்கிய காரணமாகும். நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 420 கோடி டாலராக குறைந்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.9 சதவீதம் ஆகும். சென்ற ஆண்டின் இதே காலாண்டில் இது 6.5 சதவீதமாக இருந்தது.

இறக்குமதி செலவினம்

மேற்கண்ட அம்சங்களால் ரூபாய் மதிப்பு உயர்ந்து வந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய், உரம், சமையல் எண்ணெய், பருப்பு போன்ற முக்கிய பொருள்களின் இறக்குமதி செலவினம் குறைந்து பணவீக்கம் மேலும் குறைய வாய்ப்புள்ளது. அதேசமயம், ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் வருவாய் குறையும். ஏழு மாதங்கள் தொடர் வளர்ச்சிக்கு பின் பிப்ரவரியில் ஏற்றுமதி 3.67 சதவீதம் சரிவடைந்துள்ளது.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply