அரிசி & சிறுதானியங்கள்

எதிர்வரும் 2014 : 15 பருவத்தில் கோதுமை, அரிசி, மக்காச்சோளம் ஏற்றுமதி 29 சதவீதம் குறையும்

எதிர்வரும் 2014:15 சந்தைப் பருவத்தில் கோதுமை, அரிசி, மக்காச்சோளம் ஏற்றுமதி 29 சதவீதம் சரிவடைந்து 1.35 கோடி டன்னாக குறையும் என்றும், நடப்பு பருவத்தில் இந்த மூன்று விளைபொருள்களின் ஏற்றுமதி 1.90 கோடி டன்னாக இருக்கும் என்றும் அமெரிக்க வேளாண் துறை முன்னறிவிப்பு செய்துள்ளது.

சந்தைப் பருவங்கள்

கோதுமை சந்தைப் பருவம் ஏப்ரலில் தொடங்கி மார்ச் மாதத்தில் நிறைவடைகிறது. நெல் சந்தைப் பருவம் அக்டோபரில் தொடங்கி செப்டம்பர் மாதத்திலும், மக்காச்சோளம் சந்தைப் பருவம் நவம்பரில் தொடங்கி அக்டோபர் மாதத்திலும் நிறைவடைகிறது. சர்வதேச சந்தையில் இந்த மூன்று விளைபொருள்களின் விலை குறைந்து வருவதால் ஏற்றுமதியில் அதிக லாபம் இருக்காது. எனவே ஏற்றுமதி குறையும் என அமெரிக்க வேளாண் துறை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் புதிய பருவங்களில் 80 லட்சம் டன் அரிசியும், 30 லட்சம் டன் கோதுமையும், 25 லட்சம் டன் மக்காச்சோளமும் ஏற்றுமதியாகும். 30 லட்சம் டன் கோதுமையில் பெரும் பகுதி தனியாராலும், ஓரளவு அரசு நிறுவனங்களாலும் ஏற்றுமதி செய்யப்படும் என அமெரிக்க அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது. 2013 ஆகஸ்டு மாதத்தில் ஏற்றுமதிக்காக 20 லட்சம் டன் கோதுமையை ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இதில் ஒரு பகுதி அடுத்த பருவத்தில் ஏற்றுமதியாகும் என இவ்வமைப்பு எதிர்பார்க்கிறது.

நடப்பு பருவத்தில் (2013 அக்டோபர் – 2014 செப்டம்பர்) ஒரு கோடி டன் அரிசி (பாசுமதி + சாதாரண ரகம்) ஏற்றுமதியாகும் என்றும், அடுத்த பருவத்தில் ஏற்றுமதி 80 லட்சம் டன்னாக குறையும் என்றும் அமெரிக்க வேளாண் துறை கருதுகிறது. மக்காச்சோளத்தை பொறுத்தவரை ஏற்றுமதி 30 லட்சம் டன்னிலிருந்து 25 லட்சம் டன்னாக குறையும் என இத்துறை கணித்துள்ளது. உள்நாட்டில் தேவைப்பாடு அதிகரிக்க உள்ளதே இதன் பின்னணியாக இருக்கும். கோழிப்பண்ணைகளில் பிரதான தீவனமாக மக்காச்சோளம் பயன்படுத்தப்படுகிறது.

உற்பத்தி மதிப்பீடு

2014 ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ள வேளாண் பருவத்தில் அரிசி உற்பத்தி 1.03 கோடி டன்னாகவும், கோதுமை விளைச்சல் 9.25 கோடி டன்னாகவும் இருக்கும் என அமெரிக்க வேளாண் துறை மதிப்பீடு செய்துள்ளது.

Leave a Reply