வணிகச் செய்திகள்

ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்

ஏடிஎம் மையங்களில் மாதம் ஒன்றுக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறைக்கும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும் திட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. வங்கி வாடிக்கையாளர் ஒருவர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் நடைமுறைக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுபாட்டை விதித்ததுள்ளது. அதன்படி, ஒருவர் கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம் மையங்களில் மாதம் ஒன்றுக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்கவோ, இருப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை பார்க்கவோ அல்லது மினி ஸ்டேட்மென்ட் எடுக்கவோ முடியும். இதற்கு கட்டணம் இல்லை. ஐந்து முறைக்கு மேல் பணம் எடுக்கவோ அல்லது இருப்பு உள்ளிட்ட விவரங்களை அறியவோ ஏடிஎம்மை பயன்படுத்தினால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

அதன்படி ஒவ்வொரு முறைக்கும் ரூ.20 வசூலிக்கப்படும். மேலும், பிற வங்கிகளின் ஏடிஎம்களில் 3 முறை மட்டுமே கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம். இது ஏற்கனவே 5 முறை இருந்தது. இந்த நடைமுறை சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களுரூ, ஐதாரபாத் ஆகிய 6 நகரங்களில் நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை தவிர தமிழகத்தின் பிற இடங்களில் பூஜ்யம் இருப்பு வைக்க அனுமதியுள்ள எஸ்பி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு தற்போதுள்ள நடைமுறையே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply