இரும்பு தாது & உலோகம்

ஏப்ரல்:பிப்ரவரி மாத காலத்தில் இரும்புத்தாது ஏற்றுமதி 28% சரிவு

இரும்புத்தாது ஏற்றுமதி, ஏப்ரல்:பிப்ரவரி மாத காலத்தில் 28 சதவீதம் சரிவடைந்து 1.26 கோடி டன்னாக குறைந்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் 1.74 கோடி டன் இரும்புத்தாது ஏற்றுமதி ஆகியிருந்தது. இந்திய கனிமவள நிறுவனங்கள் கூட்டமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.

மூன்றாவது இடம்

சில ஆண்டுகளுக்கு முன் வரை இரும்புத்தாது ஏற்றுமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தது. சில மாநிலங்களில் சுரங்கப்பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதாலும், ஏற்றுமதிக்கு தடை போன்ற காரணங்களால் தற்போது நம் நாடு பின்தங்கியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் (2012–13) 1.84 கோடி டன் இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் ஏற்றுமதி 20 சதவீதம் குறைந்து 1.35 கோடி டன்னாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரும்புத்தாது ஏற்றுமதியில் பரதீப், விசாகப்பட்டினம் மற்றும் ஹால்டியா ஆகிய துறைமுகங்களின் பங்கு அதிகமாக இருந்து வருகிறது.

கோவாவில் சுரங்கப்பணிகளுக்கும், கர்நாடகாவில் ஏற்றுமதிக்கும் விதிக்கப்பட்டதுடன், இரும்புத்தாது துகள் மற்றும் கட்டிகள் ஏற்றுமதி மீதான வரி 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதாலும் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து சீனா அதிக அளவில் இரும்புத் தாது இறக்குமதி செய்கிறது. ஏப்ரல்–பிப்ரவரி மாத காலத்தில் சீனாவிற்கான ஏற்றுமதி 31 சதவீதம் சரிவடைந்து 1.04 கோடி டன்னாக குறைந்துள்ளது. சீனாவை அடுத்து ஜப்பான் நம்மிடம் அதிக இரும்புத்தாது வாங்குகிறது. கணக்கீட்டு காலத்தில் அந்த நாட்டுக்கு 16.50 லட்சம் டன் இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

தடை நீடிப்பு

கோவாவில் சுரங்கப்பணிகளுக்கும், கர்நாடகாவில் ஏற்றுமதிக்கும் தடை நீடிப்பதால் ஒடிசா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து சற்றே தரம் குறைந்த இரும்புத்தாது தற்போது ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு நிதி ஆண்டில் 1.40 கோடி டன் இரும்புத்தாது உற்பத்தியாக வாய்ப்புள்ளது என இத்துறையைச் சேர்ந்தவர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

 

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply