இறக்குமதி செய்திகள்

ஏப்ரல் மாதத்தில் இறக்குமதி 15% குறைந்தது

ஏப்ரல் மாதத்தில் ஒட்டுமொத்த அளவில் இறக்குமதி 15 சதவீதம் குறைந்து 3,570 கோடி டாலராக குறைந்துள்ளது. தங்கம் இறக்குமதி அதிகபட்சமாக 74 சதவீதம் சரிந்து 176 கோடி டாலராக குறைந்துள்ளது. தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் மேற்கொண்ட நடவடிக்கைகளே இதற்கு காரணமாகும். சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 678 கோடி டாலருக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.

வெள்ளி இறக்குமதி

ஏப்ரல் மாதத்தில் வெள்ளி இறக்குமதி 26.5 சதவீதம் குறைந்து 47 கோடி டாலராக குறைந்துள்ளது. இரும்பு, உருக்கு, இயந்திரங்கள், மின்னணு மற்றும் போக்குவரத்து சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் இறக்குமதி 6 முதல் 35 சதவீதம் வரை குறைந்துள்ளது. தொழில் துறையில் முதலீட்டு நடவடிக்கைகள் மந்தமாக இருப்பதையே எடுத்துக் காட்டுகிறது.

ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 5.26 சதவீதம் வளர்ச்சி கண்டு 2,560 கோடி டாலராக உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 3.2 சதவீதம் சரிவடைந்திருந்தது.

கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு ஏப்ரலில் ஏற்றுமதி குறைந்துள்ளது. பொதுவாக ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இருப்பது இல்லை. எனவே இது குறித்து அதிருப்தி கொள்ள வேண்டிய அவசியமில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏப்ரல் மாதத்தில் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி 21.25 சதவீதம் உயர்ந்து 575 கோடி டாலராக உயர்ந்துள்ளது. மருந்து ஏற்றுமதி 10.41 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. நூலிழைகள் மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி முறையே 11.74 மற்றும் 14.33 சதவீதம் அதிகரித்துள்ளது.

நவரத்தினம், ஆபரணங்கள்

அதேசமயம் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 8.1 சதவீதம் குறைந்துள்ளது. நடப்பு 2014-15-ஆம் நிதி ஆண்டின் முதல் மாதத்தில் (ஏப்ரல்) சரக்குகள் இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறை 1,010 கோடி டாலராக குறைந்துள்ளது.

Leave a Reply