வங்கிக் கடன் & மான்யம்

ஏற்றுமதியாளர்களுக்கு வழங்க வேண்டிய வரி ரீபண்டு ரூ.19,000 கோடியை எட்டியது நிதி நெருக்கடியால் ஏற்றுமதி பாதிப்பு

ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வரி ரீபண்டு தொகை ரூ.19,000 கோடியை எட்டியுள்ளது. இதனால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு (எஃப்.ஐ.இ.ஓ) புகார் தெரிவித்துள்ளது.

சுங்க வரி ரீபண்டு

ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருள்களுக்கு விதிக்கப்படும் சுங்க வரியில் குறிப்பிட்ட சதவீதம் ரீபண்டு வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்பட வேண்டிய ரீபண்டு மற்றும் பிற தள்ளுபடி சலுகைகளுடன் மொத்த நிலுவை தொகை ரூ.19,000 கோடியை எட்டியுள்ளதாகஎஃப்.ஐ.இ.ஓ. தெரிவித்துள்ளது.

இவ்வாறு வரி ரீபண்டு கோரிக்கைகள் அதிகரிக்கும் பட்சத்தில் ஏற்றுமதி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் கருதுகின்றன. இதனால் ஏற்றுமதி வளர்ச்சி வேகம் குறையும் என்றும், நிர்ணயித்த இலக்கை எட்ட முடியாது போகலாம் என்றும் அஞ்சப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் (2013-14) 10 சதவீத வளர்ச்சியுடன் 32,500 கோடி டாலருக்கு ஏற்றுமதி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல்-ஜனவரி மாத காலத்தில் ஏற்றுமதி 5.71 சதவீதம் வளர்ச்சி கண்டு 25,709 கோடியாக உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி 13.47 சதவீதம் அதிகரித்தது. நவம்பர் மாதத்தில் 5.86 சதவீதமும், டிசம்பர் மாதத்தில் 3.49 சதவீதமும், ஜனவரியில் 3.79 சதவீதமும் ஏற்றுமதி உயர்ந்துள்ளது.

ஆனால் வரி ரீபண்டு பிரச்சினையால் சிறிய மற்றும் நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் 31,200 கோடி டாலர் முதல் 31,500 கோடி டாலர் வரைதான் ஏற்றுமதி செய்ய முடியும் என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது தற்போதுள்ள நிலுவைத் தொகையில் சேவை வரி ரூ.3,000 கோடி, வரி ரீபண்டு ரூ.10,000 கோடி மற்றும் உற்பத்தி வரியில் தள்ளுபடி சலுகை ரூ.6,000 கோடி அடங்கும்.

சென்னை துறைமுகம்

இந்த தொகை கிடைக்காமல் இருப்பதால் ஏற்றுமதியாளர்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும், மதிப்புக்கூட்டு வரியால் மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜவஹர்லால் நேரு துறைமுகத்திலிருந்து வரி ரீபண்டு கோரி வந்த விண்ணப்பங்கள் அதிகபட்சமாக ரூ.3,059 கோடி அளவிற்கு உள்ளது. அடுத்து சென்னை துறைமுகத்திலிருந்து ரூ.1,280 கோடி அளவிற்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply