ஏற்றுமதி செய்திகள்

ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் நன்றாக இருக்கும்

சென்ற நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும், ஐ.டி., மருந்து உள்ளிட்ட அனைத்து துறை நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் நன்றாக இருக்கும் என சி.என்.ஐ. ஆய்வு நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் கிஷோர் பி ஓஸ்வால் தெரிவித்தார்.

ரூபாய் வெளிமதிப்பு

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவு மற்றும் பாரம்பரிய ஏற்றுமதி சந்தையான அமெரிக்காவில் தேவைப்பாடு அதிகரித்துள்ளதே இதற்கு காரணமாகும். ஜனவரி-மார்ச் காலாண்டின் இறுதியில் ரூபாயின் வெளிமதிப்பு 61.80-லிருந்து 59.89-ஆக உயர்ந்தது. இருப்பினும் இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் ரூபாய் வெளிமதிப்பு குறைந்துள்ளது. இது, ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு சாதகமான அம்சமாகும். அமெரிக்க பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட தொடங்கியதால் இந்திய பொருள்களுக்கான தேவைப்பாடு அதிகரித்துள்ளது.

ஐ.டி., மருந்து துறை

மேலும், சீன அரசு தொழிலாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தியதால் உற்பத்தி செலவினம் அதிகரித்தது. இது நம்நாட்டு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்தது என முன்னணி முதலீட்டு ஆய்வு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனவே ஐ.டி., மருந்து, ஐவுளி, தோல் மற்றும் ரசாயனங்கள் உள்ளிட்ட ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஐ.டி. நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் நன்றாக உள்ளன. குறிப்பாக இன்ஃபோசிஸ் மற்றும் டி.சி.எஸ். நிறுவனங்களின் நிகர லாபம் மதிப்பீட்டை காட்டிலும் நன்கு அதிகரித்துள்ளது.

உள்நாட்டில் கார் விற்பனை சரிவடைந்த போதிலும் இரு சக்கர வாகன விற்பனை நன்றாக இருந்தது. மேலும் இரு சக்கர வாகன ஏற்றுமதியும் நன்றாக இருந்ததால் இந்நிறுவனங்களின் வருவாயும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி ஏற்படும் நிலையில் மோட்டார் வாகனம் மற்றும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் நடப்பு நிதி ஆண்டிலும் நன்றாக இருக்கும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மருந்து இறக்குமதிக்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றபடுவதால் இந்திய நிறுவனங்கள் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகின்றன. இருப்பினும் புதிய மருந்து பொருள்களை அறிமுகம் செய்து வருவதால் நடப்பு நிதி ஆண்டில் இந்நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் நன்றாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply