ஏற்றுமதி செய்திகள்செய்திகள்

ஏற்றுமதியில் கடும் சரிவை சந்தித்த 17 தொழில் துறைகள்

நாட்டில் உள்ள 30 தொழில் துறைகளில் பெட்ரோலியம், டெக்ஸ்டைல், இன்ஜினியரிங் உட்பட 17 முக்கிய துறைகளின் ஏற்றுமதி கடந்த மார்ச் மாதத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் 2,271 கோடி டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. இது இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.47 சதவீதம் சரிவு. அதோடு, தொடர்ந்து 16வது மாதமாக இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதி துறையை ஊக்குவிக்க இதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக மிக முக்கிய துறைகளின் ஏற்றுமதி கடுமையாக குறைந்துள்ளது. இந்த துறைகள் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கு வகிப்பவை.

எனவே இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. வெளிநாடுகளில் ஆர்டர்கள் குறைந்து வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால் உள்நாட்டில் வேலையிழப்பு அதிகரிக்க தொடங்கிவிடும் என ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தலைவர் எஸ்.சி.ரால்ஹான் கூறினார். கடந்த மார்ச் மாதத்தில் முக்கிய துறைகளில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இன்ஜினியரிங் துறை 11.29 சதவீதமும், பெட்ரோலியம் 21.43 சதவீதமும் சரிவடைந்தது குறிப்பிடத்தக்கது. தங்கம், நவரத்தின ஏற்றுமதி மட்டும் 4.61 சதவீதம் என சொற்ப வளர்ச்சியை அடைந்துள்ளது.

Leave a Reply