ஏற்றுமதி செய்திகள்

ஏற்றுமதி அதிகரித்து வருவதால் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2 சதவீதமாக குறையும் சி.ரங்கராஜன் தகவல்

இறக்குமதி குறைந்து ஏற்றுமதி அதிகரித்து வருவதால் நடப்பு நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2 சதவீதமாக குறையும் என பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனைக்குழு தலைவர் சி.ரங்கராஜன் தெரிவித்துள்ளார். சென்ற நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத அளவிற்கு 4.8 சதவீதமாக உயர்ந்து இருந்தது.

முதல் ஆறு மாதங்களில்…

நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஏப்ரல்–செப்டம்பர்) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 3.1 சதவீதமாக (2,690 கோடி டாலர்) குறைந்தது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் 4.5 சதவீதமாக (3,790 கோடி டாலர்) உயர்ந்து இருந்தது.

நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பிற்கு கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவது முக்கிய காரணமாகும். எனவே, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க தொடங்கியுள்ளது.

மேற்கத்திய நாடுகளின் முன்னேற்றத்தால் நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்க தொடங்கியுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் ஏற்றுமதி 5.71 சதவீதம் அதிகரித்து 25,709 கோடி டாலராக உயர்ந்துள்ளது. எனவே நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் வரும் நிலை உருவாகியுள்ளது.

பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து ரங்கராஜன் கூறியதாவது:–

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது பணக் கொள்கை ஆய்வு அறிக்கையின் முக்கிய நோக்கங்களுள் ஒன்றாகும். பணவீக்கம் தற்போது குறையத் தொடங்கியுள்ளது. இது மேலும் குறைந்தால் ரிசர்வ் வங்கிக்கு பொருளாதார வளர்ச்சியை கவனத்தில் கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

வளர்ச்சிப் பாதை

மந்தநிலையிலிருந்து பொருளாதாரம் விடுபட்டு வளர்ச்சி பாதைக்கு திரும்ப தொடங்கியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் 4.9 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது அரையாண்டில் பொருளாதாரத்தில் 5.2 சதவீதம் வளர்ச்சி ஏற்படும். இது, பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பி வருவதை எடுத்துக்காட்டுகிறது. எதிர்வரும் நிதி ஆண்டில் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

இவ்வாறு ரங்கராஜன் கூறினார்.

 

Leave a Reply