ஏற்றுமதி செய்திகள்

ஏற்றுமதி உயர்ந்ததால் வர்த்தக பற்றாக்குறை குறைந்தது

புதுடில்லி: மத்திய அரசின் நடவடிக்கைகளால், சென்ற ஜனவரியில், நாட்டின் ஏற்றுமதி, முந்தைய மாதத்தை விட, 3.79 சதவீதம் உயர்ந்து, 2,675 கோடி டாலராக (1,60,500 கோடி ரூபாய்) அதிகரித்து உள்ளது.

சரிவடைந்துள்ளது: இதே காலத்தில், நாட்டின் வர்த்தக பற்றாக் குறை, 1,014 கோடி டாலரில் (60,840 கோடி ரூபாய்) இருந்து, 992 கோடி டாலராக (59,520 கோடி ரூபாய்) குறைந்து உள்ளது. சென்ற ஜனவரியில், ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் இறக்குமதி, 18.07 சதவீதம் குறைந்து, 3,667 கோடி டாலராக (2,20,020 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையை, குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைக்க வழி வகுத்துள்ளது. ஒரு நாட்டின் ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரிக்கும் பட்சத்தில், அது, வர்த்தக பற்றாக்குறைக்கு வழி வகுக்கிறது. ஏற்றுமதி உயரும் போது, வர்த்தக பற்றாக்குறை குறைகிறது. இதே மாதத்தில், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி, 77 சதவீதம் குறைந்து, 172 கோடி டாலராக (10,320 கோடி ரூபாய்) சரிவடைந்து உள்ளது. இது, சென்ற ஆண்டு ஜனவரியில், 749 கோடி டாலராக (44,940 கோடி டாலர்) இருந்தது. நடப்பு 2013-14ம் நிதியாண்டில், ஏப்.,- ஜன., வரையிலான, 10 மாதங்களில், நாட்டின் ஏற்றுமதி, 5.71 சதவீதம் உயர்ந்து, 25,709 கோடி டாலராக (15,42,540 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.

ஏற்றுமதி இலக்கு: “இதே நிலை மார்ச் வரை தொடர்ந்தால், நடப்பு நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதி, இலக்கு அளவான, 32,500 கோடி டாலரை (19 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்) எட்டும்” என, வர்த்தக துறை செயலர் ராஜீவ் கெர் தெரிவித்தார். தங்கம் மீதான கட்டுப்பாடுகளால், அதன் இறக்குமதி குறைந்து உள்ளது.

Leave a Reply