பொறியியல் & மின்னணு சாதனங்கள்

ஏழு மாதங்கள் தொடர் வளர்ச்சிக்கு பின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி சரிவடைந்தது

ஏழு மாதங்கள் தொடர் வளர்ச்சிக்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி 3.05 சதவீதம் குறைந்துள்ளது. ஆசியான் நாடுகளுக்கான ஏற்றுமதி கணிசமாக குறைந்தே இதற்கு காரணமாகும்.

பிப்ரவரி மாதத்தில்…

கடந்த 2013 பிப்ரவரி மாதத்தில் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி 516 கோடி டாலராக இருந்தது. இது, இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் 502 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற ஆசியான் நாடுகளுக்கு ஏற்றுமதி மிகவும் சரிவடைந்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி முறையே 79.11 சதவீதம் மற்றும் 61 சதவீதம் குறைந்துள்ளது. மலேசியாவிற்கான ஏற்றுமதி 70 சதவீதமும், இந்தோனேசியாவிற்கான ஏற்றுமதி 36 சதவீதமும் சரிவடைந்துள்ளது.

அதேசமயம் தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி முறையே 60 சதவீதம் மற்றும் 16 சதவீதம் உயர்ந்துள்ளது.

அமெரிக்கா

பொருளாதார வலிமையில் உலக அளவில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் கடந்த 2008–ஆம் ஆண்டில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அந்நாட்டிற்கான பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி குறைந்துள்ளது. இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது. இதன் காரணமாக பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவிற்கு பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி 8 சதவீதம் உயர்ந்தது. இருப்பினும் முதல் 11 மாதங்களில் அந்நாட்டிற்கான ஏற்றுமதி 5 சதவீதம் குறைந்துள்ளது.

ஐரோப்பா

முதல் 11 மாதங்களில் ஒட்டுமொத்தத்தில் அனைத்து நாடுகளுக்குமான பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி சுமார் 9 சதவீதம் அதிகரித்து 5,550 கோடி டாலராக உயர்ந்துள்ளது. நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்கு 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. மேற்கண்ட நாடுகளின் மந்தநிலையால், சென்ற 2012–13–ஆம் நிதி ஆண்டில் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி 3 சதவீதம் குறைந்து 5,670 கோடி டாலராக குறைந்துள்ளது.

கடனிற்கான வட்டி விகிதம் அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் நாட்டின் உற்பத்தி துறை தொடர்ந்து மந்தமாக உள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரீஃபண்டு தொகையும் ரூ.19,000 கோடியை எட்டியுள்ளது. இதுபோன்ற காரணங்களால் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி குறைந்துள்ளது.

பொறியியல் சாதனங்களை இந்தியா பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. மின் உற்பத்தி இயந்திரங்கள், கட்டுமான துறைக்கான சாதனங்கள், போக்குவரத்து சாதனங்கள் போன்ற கனரக பொருள்கள் மற்றும் வார்ப்படங்கள், ஃபோர்ஜிங்குகள், நட்டுகள், போல்ட்டுகள் உள்பட எண்ணற்ற இயந்திரங்கள், கருவிகள், உபகரணங்கள் பொறியியல் சாதனங்கள் என்றழைக்கப்படுகின்றன.

தொழிற்சாலை

பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதியில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கனரக இயந்திரங்களின் பங்கு 14 சதவீதமாகும். இந்த சாதனங்கள் ஏற்றுமதி பிப்ரவரியில் 8 சதவீதம் குறைந்து 78.59 கோடி டாலராக குறைந்துள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் மத்திய அரசால் பொறியியல் துறை நிறுவனங்களுக்கு தற்போது சலுகை வழங்க முடியாது என்றும், புதிய அரசு அமையும் வரை பொறுத்திருக்க வேண்டியது அவசியம் என்றும் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கமிட்டியின் (இ.இ.பி.சி. இந்தியா) தலைவர் அனுபம் ஷா தெரிவித்துள்ளார்.

இலக்கு

நாட்டின் சரக்குகள் ஏற்றுமதியில் பொறியியல் சாதனங்களின் பங்கு 20 சதவீதமாக உள்ளது. பிப்ரவரியில் சரக்குகள் ஏற்றுமதி 3.67 சதவீதம் குறைந்து 2,568 கோடி டாலராக குறைந்தது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் சரக்குகள் ஏற்றுமதி 3.79 சதவீதம் மட்டுமே அதிகரித்து 28,270 கோடி டாலராக உள்ளது. எனவே, நடப்பு 2013–14–ஆம் நிதி ஆண்டிற்கான ஏற்றுமதி இலக்கை (32,500 கோடி டாலர்) எட்டுவது கடினம் என்று பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply