ஏற்றுமதி செய்திகள்

ஏழு மாதங்கள் தொடர் வளர்ச்சிக்கு பின் பிப்ரவரியில் ஏற்றுமதி 3.67 சதவீதம் சரிவு

ஏழு மாதங்கள் தொடர் வளர்ச்சிக்குப் பின் பிப்ரவரியில் சரக்குகள் ஏற்றுமதி 3.67 சதவீதம் குறைந்து 2,568 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தால் கடந்த 2013 அக்டோபர் மாதத்தில் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்றுமதி 13.47 சதவீதம் உயர்ந்தது. இதன் பிறகு இவ்வாண்டு ஜனவரி வரை ஏற்றுமதியில் ஒற்றை இலக்க அளவிற்கே வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பிப்ரவரியில் ஏற்றுமதி குறைந்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் ஏற்றுமதி 4.79 சதவீதம் மட்டுமே அதிகரித்து 28,270 கோடி டாலராக உள்ளது. இதனையடுத்து இந்த நிதி ஆண்டிற்கான ஏற்றுமதி இலக்கு (32,500 கோடி டாலர்) எட்டப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இலக்கைக் காட்டிலும் ஏற்றுமதி சுமார் 1,800 கோடி டாலர் குறையும் என இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு (எஃப்.ஐ.இ.ஓ) தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில்…

எப்.ஐ.இ.ஓ. தலைவர் ரஃபீக் அஹமது இதுகுறித்து கூறுகையில், ‘‘சர்வதேச அளவில் இந்திய சரக்குகளுக்கு தேவைப்பாடு அதிகரித்துள்ளது. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இந்த வாய்ப்பை பயன்படுத்த முடியவில்லை. ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வரி ரீபண்டு தொகை ரூ.20,000 கோடியை தாண்டியுள்ளது’’ என்று தெரிவித்தார். ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருள்களுக்கு விதிக்கப்படும் சுங்க வரியில் குறிப்பிட்ட சதவீதம் ரீபண்டாக வழங்கப்படுகிறது.

உற்பத்தி துறை நன்றாக இருந்தால்தான் சரக்குகளை தயாரித்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்ய முடியும். சென்ற சில மாதங்களாக நாட்டின் உற்பத்தி துறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சாலை போக்குவரத்து, துறைமுக வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நன்றாக இல்லாததாலும், போக்குவரத்து கட்டணங்கள் அதிகமாக உள்ளதாலும் ஏற்றுமதி வளர்ச்சி வேகம் குறைந்து வருகிறது என்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்றும் அஹமது அண்மையில் தெரிவித்தார்.

இறக்குமதி

பிப்ரவரி மாதத்தில் சரக்குகள் இறக்குமதி 17.09 சதவீதம் குறைந்து 3,381 கோடி டாலராக குறைந்துள்ளது. அம்மாதத்தில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி கணிசமாக குறைந்தது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைப்பாட்டில் 80 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. பிப்ரவரி மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி 3.1 சதவீதம் குறைந்து 1,360 கோடி டாலராக குறைந்தது. இதுபோன்ற காரணங்களால் இறக்குமதி குறைந்துள்ளது.

வர்த்தக பற்றாக்குறை

இதனையடுத்து சரக்குகள் இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையில் உள்ள வித்தியாசமான வர்த்தக பற்றாக்குறை ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு 813 கோடி டாலராக குறைந்தது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் இறக்குமதி 8.65 சதவீதம் குறைந்து 41,086 கோடி டாலராக உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் இது 44,978 கோடி டாலராக உயர்ந்து இருந்தது. இதே காலத்தில் வர்த்தக பற்றாக்குறை 29 சதவீதம் குறைந்து 17,992 கோடி டாலரிலிருந்து 12,800 கோடி டாலராக குறைந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் வர்த்தக பற்றாக்குறை சென்ற நிதி ஆண்டைக் காட்டிலும் 27 சதவீதம் குறைந்து 14,000 கோடி டாலராக குறையும் என சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்னியச் செலாவணி

சென்ற நிதி ஆண்டில் அன்னியச் செலாவணி வெளியேற்றத்திற்கும், வரவுக்கும் இடையில் உள்ள வித்தியாசமான நடப்பு கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத அளவிற்கு 8,820 கோடி டாலராக உயர்ந்து இருந்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதமாகும். வர்த்தக பற்றாக்குறை குறைந்ததையடுத்து நடப்பு நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை சென்ற நிதி ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதம் குறைந்து 4,500 கோடி டாலராக குறையும் என நிதி அமைச்சகம் அண்மையில் தெரிவித்துள்ளது. இதனையடுத்து டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நன்றி தினத்தந்தி

 

Leave a Reply