காய் கறிகள் & பழங்கள்

ஐரோப்பாவில் மாம்பழம் இறக்குமதிக்கு தடை உலக வர்த்தக அமைப்பிடம் புகார் செய்ய இந்தியா திட்டம்

ஐரோப்பிய நாடுகள் இந்தியாவில் இருந்து மாம்பழம் இறக்குமதி செய்ய தற்காலிக தடை விதித்துள்ளன. இந்த தடையை நீக்கவில்லையென்றால் உலக வர்த்தக அமைப்பிடம் புகார் செய்ய உள்ளதாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

பரிசோதனை கூடங்கள்

அவர் மேலும் கூறியதாவது-

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் வாயிலாக நாடு முழுவதும் உலக தரம் வாய்ந்த பரிசோதனை கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாணையம் வழங்கும் தரச் சான்றிதழை ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் இதர நாடுகள் அங்கீகரித்துள்ளன.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகள் எவ்வித ஆலோசனையும் செய்யாமல் தன்னிச்சையாக இறக்குமதிக்கு தடை விதித்துள்ளன. இதன் காரணமாக இரு தரப்பிற்கும் இடையிலான வர்த்தக உறவில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். இது குறித்து ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2013 – ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மாம்பழம் மற்றும் சில காய்கறிகளில் பூச்சித் தொற்று இருந்ததால் தற்போது அந்நாடுகள் இந்தியாவில் இருந்து இவற்றை இறக்குமதி செய்ய மே 1 – ந் தேதி முதல் 2015 டிசம்பர் வரை தடை விதித்துள்ளன.

முதலிடம்

சர்வதேச அளவில் மாம்பழம் ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 70,000 டன் மாம்பழ வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு அதிகளவில் மாம்பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Leave a Reply