காய் கறிகள் & பழங்கள்

ஐரோப்பிய யூனியனிடம் மாம்பழம் இறக்குமதி மீதான தடையை நீக்க கோரிக்கை

ஐரோப்பிய யூனியனிடம் இந்திய மாம்பழம் இறக்குமதி மீதான தடையை நீக்குமாறு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

உயர்தர அல்போன்சா

28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய யூனியன், கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவின் உயர்தர அல்போன்சா மாம்பழ இறக்குமதி மே மாதத்திலிருந்து நிறுத்தப்படும் என தெரிவித்தது. மாம்பழங்களில் பூச்சித் தொற்று இருப்பதாக கூறி 2015 டிசம்பர் மாதம் வரை தடை விதிக்கப்படுவதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்தது. இதனையடுத்து மாம்பழங்கள் மீது தீவிர ஆய்வு மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் அஜய் சகாய் தெரிவித்தார்.

‘‘இந்திய மாம்பழங்களுக்கு ஐரோப்பா ஒரு பெரிய சந்தை இல்லை. எனினும் எந்த ஒரு தடையும் மாம்பழத்தின் விலையை குறைத்து விடும் என்றும், இதனால் விவசாயிகளுக்கு வருமானம் பெரிதும் குறையும். கடந்த சில தினங்களில் உள்நாட்டில் விலை ஏறக்குறைய 15 சதவீதம் சரிவடைந்துள்ளது’’ என்று அவர் கூறினார்.

மாம்பழத்திற்கு மட்டுமல்லாமல் சில காய்கறிகளுக்கும் ஐரோப்பா தடை விதித்துள்ளது. தாராள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் இது ஒரு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. 2007–ஆம் ஆண்டிலிருந்து இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இரு தரப்பிலும் சில நிபந்தனைகள் காரணமாக இன்னும் இந்த ஒப்பந்தம் நிறைவேறாமலேயே உள்ளது.

நீண்ட காலமாக ஐரோப்பா இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக பங்குதாரராக இருந்து வருகிறது. எனவே ஐரோப்பிய ஒன்றியத்துடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் பட்சத்தில் இரு தரப்பிலும் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதுடன், பரஸ்பர வர்த்தகமும் (ஏற்றுமதி + இறக்குமதி) பன்மடங்கு உயரும்.

இந்தியா முதலிடம்

சர்வதேச அளவில் மாம்பழ உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலகின் மொத்த மாம்பழ உற்பத்தியில் இந்தியாவின் பங்கு சுமார் 50 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. சீனா, தாய்லாந்து, மெக்சிகோ, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, பிரேசில், நைஜீரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளும் மாம்பழம் உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன. சர்வதேச மாம்பழ உற்பத்தியில் ஆசியாவின் பங்கு (இந்தியா நீங்கலாக) 33 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. நம் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் மாம்பழங்களில் 80 சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கிறது.

Leave a Reply