இறக்குமதி செய்திகள்

கடத்தல் அதிகரித்து வருவதால் தங்கம் மீதான இறக்குமதி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் அசோசெம் வலியுறுத்தல்

நேபாளம் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளிலிருந்து கடத்தல் அதிகரித்து வருவதால் தங்கம் மீதான இறக்குமதி வரியை பத்து சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாக குறைக்க வேண்டும் என அசோம்செம் அமைப்பின் கிழக்கு மண்டல நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் கவுன்சிலின் தலைவர் சங்கர் சென் தெரிவித்தார்.

ஆகஸ்டு மாதத்தில்…

தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் இறக்குமதி வரியை படிப்படியாக அதிகரித்து 10 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இதனையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் இதுவரை சட்ட பூர்வமான தங்கம் இறக்குமதி 95 சதவீதம் குறைந்துள்ளது. இதனையடுத்து நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்து வருகிறது. அதே சமயம் தங்கம் கடத்தல் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக நேபாளம் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து கடத்தல் தங்கம் அதிகளவு இந்தியாவிற்குள் வருகிறது. சென்ற ஆண்டில் 900 கோடி டாலர் மதிப்பிற்கு கடத்தல் தங்கம் இந்தியாவிற்குள் வந்தது.

வங்காளதேசம்

நமது அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் வங்காளதேசத்தில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு வரி விதிக்கப்படுவதில்லை. இதனை கடத்தல்காரர்கள் வாய்ப்பாக பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து அந்நாடுகளுக்கு தங்கம் இறக்குமதி செய்து இந்தியாவிற்குள் எளிதாக தங்கத்தை கடத்தி வருகின்றனர்.

இறக்குமதி வரி அதிகமாக இருப்பதால் தங்க ஆபரணங்கள் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மேற்குவங்காளத்தின் 75 லட்சம் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே தங்கம் கடத்தலை தவிர்க்கவும், இத்துறையின் நலனை கருத்தில் கொண்டும் மத்திய அரசு தங்கம் இறக்குமதிக்கான வரியை குறைக்க வேண்டும் என சங்கர் சென் கூறியுள்ளார்.

தங்கம் இறக்குமதிக்கு கட்டுப்பாட்டுகளை விதித்ததையடுத்து அண்டை நாடுகளான பாகிஸ்தான், மியான்மர், இலங்கை, வங்காளதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது. மேலும் சர்வதேச அளவில் தங்கம் இறக்குமதியில் இந்தியாவை விஞ்சி சீனா முதலிடத்தை பிடித்துள்ளது.

நன்றி தினத்தந்தி

 

Leave a Reply