காபி & தேயிலை

கடந்த இரண்டு மாதங்களில் காபி ஏற்றுமதி 15% வளர்ச்சி

கடந்த இரண்டு மாதங்களில் (ஜனவரி, பிப்ரவரி) காபி ஏற்றுமதி 15 சதவீதம் அதிகரித்து 62,956 டன்னாக உயர்ந்துள்ளது என காபி வாரியம் தெரிவித்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தில் 54,679 டன்னாக இருந்தது.

பிரேசிலின் காபி உற்பத்தி குறைந்திருக்கும் என்ற மதிப்பீடுகளால் சர்வதேச சந்தையில் காபி விலை உயர்ந்து காணப்பட்டது. இதனையடுத்து இந்திய ஏற்றுமதி அதிகரித்துள்ளது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் காபி ஏற்றுமதி மதிப்பு அடிப்படையில் ரூ.824 கோடியிலிருந்து ரூ.937 கோடியாக உயர்ந்துள்ளது.

மொத்த காபி ஏற்றுமதியில் அராபிகா ரகம் ஏற்றுமதி 35.11 சதவீதம் அதிகரித்து 14,696 டன்னிலிருந்து 19,856 டன்னாக உயர்ந்துள்ளது. ரோபஸ்டா ஏற்றுமதி 7.2 சதவீதம் உயர்ந்து 25,542 டன்னிலிருந்து 27,382 டன்னாக அதிகரித்துள்ளது. இன்ஸ்டெண்டு காபி ஏற்றுமதி இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்து 3,918 டன்னிலிருந்து 10,902 டன்னாக உயர்ந்துள்ளது.

இந்தியாவிலிருந்து இத்தாலிக்கு அதிகபட்சமாக 17,205 டன் காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜெர்மனி (7,513 டன்), பெல்ஜியம் (3,709 டன்), ஜோர்டான் (3,189 டன்), துருக்கி (3,053 டன்) மற்றும் ரஷ்யா (2,576 டன்) ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

நடப்பு 2013–14 பருவத்தில் (அக்டோபர்–செப்டம்பர்) காபி உற்பத்தி 2.1 சதவீதம் குறைந்து 3.12 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. இது சென்ற பருவத்தில் (2012–13) 3.18 லட்சம் டன்னாக இருந்தது.

தினத்தந்தி

Leave a Reply