இரும்பு தாது & உலோகம்

கடந்த நிதி ஆண்டில் இரும்புத்தாது ஏற்றுமதி 2 சதவீதம் அதிகரிப்பு

கடந்த நிதி ஆண்டில் (2013 – 14) 169 கோடி டாலருக்கு இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் (2012 – 13) 166 கோடி டாலருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆக, ஏற்றுமதி 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடும் சரிவு

ஒரு காலத்தில் ஆண்டுக்கு 700 கோடி டாலர் அளவிற்கு இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் அண்மைக் காலத்தில் சுரங்கப் பணிகள் மற்றும் ஏற்றுமதிக்கு தடை, கனமழையால் உற்பத்தி பாதிப்பு போன்றவற்றால் இரும்புத்தாது ஏற்றுமதியில் கடும் சரிவு ஏற்பட்டது. இந்த நிலையில் சென்ற நிதி ஆண்டில் ஏற்றுமதியில் ஓரளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் 2012 அக்டோபரில் கோவா மாநிலத்தில் உள்ள 90 சுரங்கங்களிலும் இரும்புத்தாது எடுப்பதற்கு தடை விதித்தது. சட்டவிரோத சுரங்கப்பணிகள் அதிகரித்ததே இதற்கு காரணமாக இருந்தது. இரும்புத்தாது வர்த்தகம் கோவா மாநில பொருளாதாரத்தில் மிக முக்கிய அங்கம் வகித்ததால் தடை காரணமாக அம்மாநிலத்தின் வளர்ச்சியே பாதிக்கப்பட்டது.

தடையை தொடர்ந்து, 2012 – 13 – ஆம் நிதி ஆண்டில் இரும்புத்தாது ஏற்றுமதி 1.80 கோடி டன்னாக பெரும் சரிவு கண்டது. 2010 – 11 – ஆம் ஆண்டில் ஏற்றுமதி ஏறக்குறைய 17 கோடி டன்னாக இருந்தது. தடைக்கு முன் மதிப்பு அடிப்படையில் ஆண்டுக்கு 700 கோடி டாலருக்கு ஏற்றுமதி நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல்  – பிப்ரவரி) இரும்புத்தாது ஏற்றுமதி 1.26 கோடி டன் அளவிற்கே இருந்தது.

சர்வதேச அளவில் இரும்புத்தாது ஏற்றுமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஏற்றுமதியில் பெரும்பகுதி சீனாவிற்கு செல்கிறது. உலக அளவில் உருக்கு உற்பத்தியில் முதலிடத்தில் இருந்து வரும் சீனாவிற்கு இரும்புத்தாது தேவைப்பாடு அதிகமாக இருந்து வருகிறது.

ஏற்றுமதி இலக்கு

கோவாவில் இரும்புத்தாது சுரங்கப் பணிகளுக்கு கட்டுப்பாடுகளை நீக்க உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. எனவே, நடப்பு நிதி ஆண்டில் இரும்புத்தாது ஏற்றுமதி அதிகரித்து ஒட்டுமொத்தத்தில் சரக்குகள் ஏற்றுமதி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply