காபி & தேயிலை

கடந்த நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.6% அதிகரிப்பு

கடந்த நிதி ஆண்டில் (2013-14) காபி ஏற்றுமதி 3.6 சதவீதம் உயர்ந்து 3.15 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.04 லட்சம் டன்னாக இருந்தது.

விலை அதிகரித்தது

சர்வதேச சந்தையில், மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் டன்னுக்கும் குறைவாகவே காபி ஏற்றுமதி ஆகியிருந்தது. நான்காவது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) காபி விலை அதிகரித்ததால் ஏற்றுமதி நன்கு அதிகரித்தது. காபி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் உற்பத்தி குறையும் என்ற மதிப்பீடு காரணமாக விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக பிப்ரவரி மாதத்தில் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு சென்றது. அக்காலாண்டில் நல்ல விலை கிடைத்ததால் கடந்த ஆண்டில் ஒட்டுமொத்த அளவில் ஏற்றுமதி கணிசமான வளர்ச்சி கண்டுள்ளதாக காபி வாரியம் தெரிவித்துள்ளது.

மொத்த காபி ஏற்றுமதியில் ரோபஸ்டா ரகத்தின் பங்கு 1.56 லட்சம் டன்னாகவும், அராபிகா ரகத்தின் பங்கு 63 ஆயிரம் டன்னாகவும் உள்ளது. 95 ஆயிரம் டன் அளவிற்கு உடனடி காபி ஏற்றுமதியாகி உள்ளது. மதிப்பின் அடிப்படையில் ஏற்றுமதி ரூ.4,800 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டில் ரூ.4,637 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், ஜோர்டான், துருக்கி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஐந்தாவது இடம்

காபி ஏற்றுமதியில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. நம் நாட்டில் தேயிலைதான் அதிகம் நுகரப்படுகிறது. எனவே உற்பத்தியாகும் காபியில் 80 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகிறது. நடப்பு பருவத்தில் (2013 அக்டோபர்- 2014 செப்டம்பர்) நாட்டின் காபி உற்பத்தி 3.12 லட்சம் டன்னாக இருக்கும் என காபி வாரியம் மதிப்பீடு செய்துள்ளது. கடந்த பருவத்தில் உற்பத்தி 3.18 லட்சம் டன்னாக இருந்தது. ஆக, இந்த பருவத்தில் காபி உற்பத்தி 2.1 சதவீதம் சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply