சேவைகள் ஏற்றுமதி

கடந்த பிப்ரவரி மாதத்தில் சேவைகள் ஏற்றுமதி 1,316 கோடி டாலர்

கடந்த பிப்ரவரி மாதத்தில் சேவைகள் ஏற்றுமதி 1,316 கோடி டாலராக குறைந்து உள்ளது. இது, ஜனவரியில் 1,393 கோடி டாலராக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் சேவைகள் இறக்குமதி 727 கோடி டாலரிலிருந்து 639 கோடி டாலராக குறைந்துள்ளது. நம் நாட்டில் சேவை அளிப்புத் துறைகளின் பங்களிப்பு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 65 சதவீதமாக உள்ளது.

வர்த்தக உபரி

ஏப்ரல்-பிப்ரவரி மாத காலத்தில் ஒட்டுமொத்த சேவைகள் ஏற்றுமதி 15,269 கோடி டாலராக அதிகரித்து உள்ளது. மொத்த இறக்குமதி 797 கோடி டாலராக உள்ளது. ஆக, கடந்த நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் 14,472 கோடி டாலர் வர்த்தக உபரி ஏற்பட்டுள்ளது. சரக்குகள் ஏற்றுமதியைப் பொறுத்தவரை நம் நாட்டில் வர்த்தக பற்றாக்குறை நிலவுகிறது. அதாவது ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாக உள்ளது. அதேசமயம், சேவைகளைப் பொறுத்தவரை இறக்குமதியை காட்டிலும் ஏற்றுமதி அதிகமாக உள்ளதால் இப்பிரிவில் வர்த்தக உபரி காணப்படுகிறது. பாரத ரிசர்வ் வங்கியின் அண்மைக் கால புள்ளி விவரம் ஒன்றில் இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ரிசர்வ் வங்கி 2011 ஜூன் மாதத்திலிருந்து நம் நாடு மேற்கொள்ளும் சேவைகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. அம்மாதம் 15–ந் தேதி முதல் முறையாக ஏப்ரல் மாத சேவைகள் வர்த்தகம் குறித்த தகவலை வெளியிட்டது. ஒரு குறிப்பிட்ட மாதத்திற்கான சேவைகள் ஏற்றுமதி விவரம் சுமார் 45 தினங்களுக்குப் பின் வெளியிடப்படுகிறது.

முக்கிய சேவைகள்

சேவைகள் ஏற்றுமதியில் பயண ஏற்பாடு, போக்குவரத்து, கட்டுமானம், காப்பீடு, ஓய்வூதிய சேவைகள், நிதிச் சேவைகள், அறிவுசார் சொத்துரிமை பயன்பாட்டிற்கான கட்டணங்கள், தொலைத் தொடர்பு, கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.

புதிய சந்தைகளை இலக்காகக் கொண்டு செயல்படுதல் மற்றும் புதிய சேவைகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் இப்பிரிவில் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Leave a Reply