வணிகச் செய்திகள்

கருப்புப் பணத்தைக் கண்டறிய இந்தியா-அமெரிக்கா இணைந்து செயல்பட முடிவு

வரி ஏய்ப்பு, நிதி முறைகேட்டைக் கண்டறிதல், கருப்புப் பணத்தை வெளிக் கொணருதல் சார்ந்த வழக்குகள் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில் இணைந்து செயல்பட இந்தியாவும் அமெரிக்காவும் முடிவு செய்துள்ளன.

இரு நாடுகளின் பொருளாதாரம் சார்ந்த துறைகளும் இத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பு மற்றும் வரி சார்ந்த குற்ற நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பாக அமெரிக்க கருவூலத் துறை அதிகாரிகள் இந்திய வருமானத் துறை மற்றும் மத்திய நேரடி வரி வாரிய (சி.பி.டி.டி) அதிகாரிகளை அண்மையில் சந்தித்தனர். இச் சந்திப்பின்போது, இரு நாட்டு அரசுகளிடையேயான ஒப்பந்தம் (ஐ.ஜி.ஏ.) மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதன்படி, இரு நாட்டு பொருளாதாரத் துறை சார்ந்த அதிகாரிகளும் வரி ஏய்ப்பு, வரி முறைகேடு உள்ளிட்ட இரு நாடுகளைச் சேர்ந்த நிறுவன, தனி நபர் சார்ந்த வழக்குகள் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இந்தியா-அமெரிக்கா இடையே ஏற்கெனவே 2009-ல் வரி விதிப்பு தொடர்பாக டி.டி.ஏ.ஏ. ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதை திருத்தியமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருப்புப் பணத்தைக் கண்டறிய அமெரிக்கா முக்கியப் பங்குதாரராக விளங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரையில், மத்திய நேரடி வரி வாரியம் கருப்புப் பணத்தைக் கண்டறிவதில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. இந் நிறுவனம், வருமான வரித் துறையினருடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. மேலும், பரஸ்பர ஒப்பந்த புரசிஜர் (எம்.ஏ.பி.) மேற்கொள்ள அமெரிக்க அதிகாரிகளுடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது. எம்.ஏ.பி. என்பது வரி சார்ந்த பிரச்னையில் சிக்கியிருப்போருக்கு ஒரு மாற்று வழியாகும்.

தினமணி

Leave a Reply