காபி & தேயிலை

காபி ஏற்றுமதி 4% குறைந்தது

நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் நவம்பர் 21 வரையிலான காலத்தில் காபி ஏற்றுமதி நான்கு சதவீதம் குறைந்து 2.75 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் விலை கடும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டதே இதற்கு காரணம் என காபி வாரியம் தெரிவித்துள்ளது.

2013-ஆம் ஆண்டின் இதே காலத்தில் 2.88 லட்சம் டன் காபி ஏற்றுமதி ஆகியிருந்தது. கடந்த முழு ஆண்டில் மொத்தம் 3.12 லட்சம் டன் காபி ஏற்றுமதி செய்யப்பட்டது. பிரேசில்சர்வதேச அளவில் காபி உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்தில் உள்ளது. அந்நாட்டின் காபி உற்பத்தி குறித்த மதிப்பீடுகளால் உலக சந்தையில் காபி விலை நிலை இல்லாமல் இருந்தது.

இதன் காரணமாக, நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் இந்திய ஏற்றுமதியாளர்கள் காபியை ஏற்றுமதி செய்வது குறித்து முடிவு எடுக்க இயலாமல் தயக்கம் காட்டினர். எனினும் ஜனவரி முதல் நவம்பர் 21-ந் தேதி வரையிலான காலத்தில் காபி ஏற்றுமதி மதிப்பு அடிப்படையில் ரூ.4,549 கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தில் ரூ.4,317 கோடியாக இருந்தது.

நம் நாட்டின் மொத்த காபி ஏற்றுமதியில் ரோபஸ்டா காபியின் பங்கு அதிகமாக உள்ளது. எனினும் கணக்கீட்டு காலத்தில் ரோபஸ்டா காபி ஏற்றுமதி 17 சதவீதம் குறைந்து 1.27 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் இது 1.54 லட்சம் டன்னாக இருந்தது. அதேவேளையில், அராபிகா காபி ஏற்றுமதி 40 சதவீதம் அதிகரித்து 57,495 டன்னாக உயர்ந்துள்ளது. 2013-ஆம் ஆண்டின் இதே வரையிலான காலத்தில் அராபிகா ஏற்றுமதி 41,146 டன்னாக இருந்தது. இன்ஸ்டன்ட் காபி ஏற்றுமதி 88 சதவீதம் அதிகரித்து 23,126 டன்னிலிருந்து 43,450 டன்னாக உயர்ந்துள்ளது.நம்நாட்டிலிருந்து இத்தாலி அதிகபட்சமாக 64,883 டன் காபி இறக்குமதி செய்துள்ளது. அடுத்து ஜெர்மனி 28,538 டன்னும், ரஷ்யா 19,434 டன்னும் இறக்குமதி செய்துள்ளன.துருக்கி 13,413 டன் காபி இறக்குமதி செய்துள்ளது.

காபி உற்பத்தி நம் நாட்டில் காபியை காட்டிலும் தேயிலையே அதிகம் நுகரப்படுகிறது. இதன் காரணமாக உற்பத்தியாகும் காபியில் பெரும் பகுதி ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகிறது. நடப்பு ஆண்டில் இதுவரை 3.44 லட்சம் டன் காபி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply