தேங்காய் & தென்னை நார் பொருட்கள்

குறைந்தது தேங்காய் விளைச்சல்; கொப்பரை விலை அதிகரிப்பு : தென்னை விவசாயத்தில் மீண்டும் ஆர்வம்

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் மழை பெய்யாததால் தேங்காய் விளைச்சல் குறைந்தது. தேவை அதிகரிப்பால் கொப்பரை பருப்பு விலை 47 லிருந்து 78 ரூபாயாக உயர்ந்துள்ளது.

கீழக்கரை, காஞ்சிரங்குடி, பெரியபட்டினம், தாமரைக்குளம், ரெகுநாதபுரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பிரதான தொழிலாக தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு உள்ளனர். இரண்டு ஆண்டுகளாக, மழையின்றி விளைச்சல் வெகுவாக குறைந்துவிட்டது. கடந்தாண்டு வரை கொப்பரை பருப்பு கிலோ 47 ரூபாய்க்கு கொள்முதல் செய்த மொத்த வியாபாரிகள் தற்போது தேவை அதிகரிப்பால், 78 ரூபாய்க்கு வாங்க முன் வந்துள்ளனர். கடந்தாண்டு விலை இல்லாததால் மரங்கள் பராமரிப்பில் விவசாயிகள் கவனம் செலுத்தவில்லை.

பெரியபட்டினம் தென்னை விவசாயி மாலிக் கூறியதாவது: விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் தேங்காய் விலையில் ஏற்பட்ட பெரும் சரிவால், ஏராளமானோர் தென்னை விவசாயத்தில் ஆர்வம் செலுத்தவில்லை. இந்தாண்டு மழை இல்லாததால், தேங்காய் வடிவம் மாறி காய்ப்பு குறைந்து விட்டது. 10ஆயிரத்திற்கும் அதிகமான காய்கள் பறித்த தோப்புகளில் தற்போது 3 ஆயிரம் காய்கள் கூட காய்ப்பது இல்லை.

உரம், மருந்தடிப்பு, வெட்டுக்கூலி, உரி கூலி இப்படி கூடுதல் செலவினங்களையும் தாங்கிக் கொள்ள வேண்டி உள்ளது. தற்போது, கொப்பரைக்கு நல்ல விலை கிடைத்தும் காய் இல்லை. கொப்பரை விலையேற்றம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் மீண்டும் ஆர்வம் செலுத்த துவங்கியுள்ளனர். தேங்காய் கிலோ 18 முதல் 22 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கோடை மழை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தென்னங்கன்றுகள் ஆயிரக்கணக்கில் நடப்பட்டுள்ளன. நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்து விடும் என்ற அச்சமும் விவசாயிகளிடையே உள்ளது, என்றார்.

Leave a Reply