கலை & கைவினைப் பொருட்கள்

கைவினை பொருள்கள் ஏற்றுமதி 15% வளர்ச்சி

கடந்த பத்து ஆண்டுகளில் கைவினை பொருள்கள் ஏற்றுமதி ஆண்டுக்கு சராசரியாக 15 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இத்துறையின் ஏற்றுமதி முந்தைய ஆண்டைக் காட்டிலும் ரூபாய் மதிப்பு அடிப்படையில் 31 சதவீதமும், டாலர் மதிப்பு அடிப்படையில் 18 சதவீதமும் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற நிதி ஆண்டில் (2013-14) ரூ.23,504 கோடி மதிப்பிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக கைவினை பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் செயல் இயக்குனர் ராகேஷ் குமார் தெரிவித்தார். கைவினை பொருள்கள் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், மகா நொய்டாவில், கண்காட்சி ஒன்றை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நடத்தியது. இதனால் ரூ.2,500 கோடிக்கு வர்த்தக விசாரணைகள் வந்துள்ளதாக இக்கவுன்சில் தெரிவித்துள்ளது.வீட்டு உபயோக பொருள்கள், சமையலறை சாதனங்கள், நவநாகரிக ஆபரணங்கள் உள்பட 1,600-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் இந்த கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டன. சுமார் 2,750 நிறுவனங்கள் இதில் பங்கேற்றன. சர்வதேச இறக்குமதியாளர்கள், முகவர்கள் மற்றும் உள்நாட்டு சில்லறை விற்பனையாளர்கள், பார்வையாளர்கள் என சுமார் 6,900-க்கும் மேற்பட்டோர் இந்த கண்காட்சிக்கு வருகை தந்தனர். ஜோத்பூரைச் சேர்ந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் இந்த கண்காட்சியில் அனைவரின் கண்களையும், கருத்தையும் கவர்ந்தன. அடுத்து மொராதாபாத் நிறுவனங்கள் ஏராளமானோரை ஈர்த்தன.

Leave a Reply